குமரி மாவட்ட கடைகளில் பொட்டலப் பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை!!
சென்னை முதன்மை செயலாளர் மற்றும் தொழிலாளர் ஆணையர் கடைகள் மற்றும் நிறுவனங்களில் 2009-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் 2011-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு (பொட்டல பொருட்கள்) விதிகளின் கீழ் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மணிகண்டபிரபு தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அஞ்சுகிராமம் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் நியாய விலைக்கடைகள், கிடங்குகள் மற்றும் சுற்றுலா, வழிபாட்டு தலங்கள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாங்களில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி தொழிலாளர் உதவி ஆணையர் மணிகண்ட பிரபு கூறுகையில், முத்திரை இடப்படாத எடையளவுகள் வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத பொட்டலப் பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்பட்டு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் அதிகபட்சமாக சில்லறை விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், பொட்டலமிடுபவர் மற்றும் இறக்குமதியாளர் பதிவு சான்று பெறாதது, பொருட்களில் குறிப்பிட்டுள்ள எடை மற்றும் அளவுகள் இல்லாமை ஆகிய குற்றங்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.