ஒடிசா ரெயில் விபத்து – விடிய விடிய நடைபெறும் மறுசீரமைப்பு பணிகள் !!
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பயணிகள் ரெயில் உள்பட 3 ரெயில்கள் தடம்புரண்டு மோதியதில் பயங்கர விபத்து நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒடிசாவில் விபத்து நடைபெற்ற இடத்தில் மறுசீரமைப்பு பணிகள் இரவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விபத்து நடந்த இடத்தில், தடம் புரண்ட ரயில்களின் இடிபாடுகள் மற்றும் சிதைந்த பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து நகர்த்தப்படுவதால், மறுசீரமைப்பு பணிகள் இரவு வரை தொடர்ந்து வருகின்றன.
இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், ஒடிசாவின் பாலசோரில் ரெயில் விபத்து நடந்த இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனித சக்தியுடன் அயராது உழைத்து சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது ஏழுக்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்கள், 2 விபத்து நிவாரண ரெயில்கள், 3-4 ரெயில்வே மற்றும் சாலை கிரேன்கள் முன்கூட்டியே சீரமைக்க பயன்படுத்தப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளது. இதற்கிடையே, விபத்து நடந்த இடத்தில் மறுசீரமைப்புப் பணிகளை ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.