கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க மேலும் 4 நாட்கள் தாமதமாகும்!!
கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் நாள் தென்மேற்கு பருவமழை தொடங்கும். கடந்த ஆண்டு ஒருவாரம் முன்கூட்டியே பருவமழை தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்க தாமதம் ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி கடந்த 1-ந் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை.
இதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் 4 நாட்கள் ஆகும் என்று கூறியுள்ளது. தென் அரபிக்கடலில் மேகமூட்டம் அதிகரித்து வருகிறது. இது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழ்நிலைகளை காட்டுகிறது. எனவே இன்னும் 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம் என வானிலை ஆய்வு மையத்தினர் கூறியுள்ளனர்.