யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் வெல்லூர் தொழில் நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை!! (PHOTOS)
யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம் வெல்லூர் தொழில் நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை !
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பொறியியல் பீடத்துக்கும், இந்தியாவின் சென்னை, வெல்லூர் தொழில் நுட்ப நிறுவனத்துக்கும் (Vellore Institute of Technology) இடையிலான கல்வி சார் கூட்டுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (5) திங்கட்கிழமை காலை இடம்பெற்றது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஶ்ரீ ராகேஷ் நட்ராஜ், யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளான ஶ்ரீ மனோஜ் குமார், ஶ்ரீ நாகராஜன் ராமஸ்சுவாமி மற்றும் பல்கலைக்கழகப் பதிவாளர் வி. காண்டீபன், பொறியியல் பீடாதிபதி ஏந்திரி கே. பிரபாகரன், முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் ஏ.அற்புதராஜா, குடிசார் பொறியியல் துறைத் தலைவர் கலாநிதி பி.கேதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை, வெல்லூர் தொழில் நுட்ப நிறுவனத்தின் சார்பில், கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பாடசாலையின் (School of computer science and Engineering – SCOPE) பீடாதிபதி கலாநிதி கே.ரமேஸ் பாபு, பேராசிரியர் பி. சுவர்ணலதா மற்றும் சர்வதேச உறவுகளுக்கான உதவிப் பணிப்பாளர் கலாநிதி ஜே.என்.வி. ரகுராம் ஆகியோர் நிகழ்நிலை வாயிலாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சென்னை, வெல்லூர் தொழில் நுட்ப நிறுவனம் அதன் சர்வதேச உறவுகளுக்கான அலகின் ஊடாக சர்வதேச ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுடன் இத்தகைய கூட்டு ஆய்வு மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது. இலங்கையில் ருகுண பல்கலைக் கழகம் வெல்லூர் தொழில் நுட்ப நிறுவனத்துடன் கூட்டு ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இன்று கைச்சாத்திடப்பட்டுள்ள இந்த உடன்படிக்கைக்கமைய இரண்டு தரப்புகளில் இருந்தும் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பரிமாற்றம், கல்வி, ஆய்வு நடவடிக்கைகளில் கூட்டு போன்ற விடயங்கள் கவனஞ் செலுத்தப்படவுள்ளன.