கலப்பு திருமணம் செய்த இளம்பெண்ணை கடத்தி சென்ற உறவினர்கள் !!
பீகார் மாநிலம் அராரியா பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் காதல் மலர்ந்தது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர். இந்த விபரம் பெண் வீட்டாருக்கு தெரிந்ததும், அவர்கள் இளம்பெண்ணை கண்டித்தனர். மேலும் அவரை வீட்டை விட்டு வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அந்த பெண், தனது காதலரை ரகசியமாக தொடர்பு கொண்டு திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி ரகசிய திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பின்பு இருவரும் அருகில் உள்ள கிராமத்தில் தனியாக வசித்து வந்தனர்.
இதற்கிடையே இளம்பெண்ணை தேடிய உறவினர்கள், அவர் அருகில் உள்ள கிராமத்தில் காதல் திருமணம் செய்து வசிப்பதை அறிந்தனர். 2 நாட்களுக்கு முன்பு அங்கு சென்ற பெண்ணின் உறவினர்கள் வீட்டில் இருந்த அந்த பெண்ணை வலுகட்டாயமாக வெளியே இழுத்து வந்து ஒரு மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்றனர். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை சிலர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் பலரும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் கடத்தி சென்ற பெண்ணை அவரின் உறவினர்கள் ஆணவ கொலை செய்து விடுவார்கள் என்றும், அவர்களிடம் இருந்து பெண்ணை காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே இளம் பெண்ணை கடத்தி சென்றதாக அவரது காதலனின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.