துப்பாக்கி கொண்டு அச்சுறுத்துகிறீர்கள் !!
2009க்கு பின்னர் தமிழர் தரப்பில் இருந்து எங்காவது துப்பாக்கி வெடித்துள்ளதா? கைக்குண்டு வெடித்துள்ளதா? அதுபற்றி அவர்கள் சிந்தித்துள்ளார்களா? நியாயமான முறையில் நீதிகோரி சர்வதேச சமுகத்தை நோக்கி செல்வர்களை துப்பாக்கியால் அச்சுறுத்துகின்றீர்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.
டயஸ்போராவுடன் சேர்ந்து மீண்டும் ஆயுத கலாச்சாரத்தை நீங்கள் தூண்டக் கூடாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார் என்றும் நாங்கள் மீண்டும் நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் ஏற்படுவதை விரும்புவர்கள் அல்ல என்று தெரிவித்தார்.
“வெளிவிவகார அமைச்சர் அச்சுறுத்தல் பாணியில் மீண்டும் துப்பாக்கியை எடுப்போம் என்பதை போன்ற வார்த்தையை பிரயோகித்துள்ளார். தயவு செய்து அலிசப்ரி போன்றவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். அவர்களுக்கு நல்லிணக்கம், நீதியென்றால், பொறுப்புக் கூறல் என்றால் என்னவென்று தெரிய வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்ற விமான கட்டளை சட்டங்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த 2 ஆம் திகதி பொதுமக்களுடன் கலந்துரையாட சென்ற போது பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களினால் துப்பாக்கி முனையில் அவர் அச்சுறுத்தப்பட்டு, கொலை செய்வதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அங்கிருந்த பொதுமக்களின் முயற்சியாலும், அவரின் முயற்சியாலும் அவர் அவ்விடத்தில் உயிர் தப்பியுள்ளதாக அறிகின்றோம்.
ஆனால், யார் குற்றவாளிகளோ அவர்களை கைது செய்யாமல் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமாராட்சி மகளிர் அணித் தலைவியை மருதங்கேணி பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு 7ஆம் திகதி வரையில் தடுப்பு காவலில் வைத்துள்ளனர். இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர் உதயசிவம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் நாட்டைவிட்டு கஜேந்திரகுமார் வெளியேறிவிடக்கூடாது என்று மருதங்கேணி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கமைய கிளிநொச்சி நீதிமன்றம் அவருக்கு நாட்டை விட்டு வெளியேறி கட்டளையிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
டயஸ்போராவுடன் சேர்ந்து மீண்டும் ஆயுத கலாச்சாரத்தை நீங்கள் தூண்டக் கூடாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார். 2009க்கு பின்னர் தமிழர் தரப்பில் இருந்து எங்காவது துப்பாக்கி வெடித்துள்ளதா? கைக்குண்டு வெடித்துள்ளதா? அதுபற்றி அவர்கள் சிந்தித்துள்ளார்களா? நியாயமான முறையில் நீதிகோரி சர்வதேச சமுகத்தை நோக்கி போகின்றனர். இவ்வாறு செல்வர்களை துப்பாக்கியால் அச்சுறுத்துகின்றீர்கள்.
கஜேந்திரகுமாரின் தந்தை சுட்டுக் கொல்லப்பட்டார், பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் இன்னும் அந்த கொலைகளுக்கு நீதி கிடைக்கவில்லை. ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயத்திற்குள் சுட்டுக்கொள்ளப்பட்டார். அவரை சுட்டவர்கள் அமைச்சர்களாக இருக்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். இன்னும் நீதி கிடைக்கவில்லை.
நியாயம் நீதிபற்றி சமூகமொன்று பேசுகின்றது என்றால், அதனை துப்பாக்கி முனையால் அடக்குவது சர்வசாதாரணமாகியுள்ளது. வெளிவிவகார அமைச்சர் அச்சுறுத்தல் பாணியில் மீண்டும் துப்பாக்கியை எடுப்போம் என்பதை போன்ற வார்த்தையை பிரயோகித்துள்ளார். தயவு செய்து அலிசப்ரி போன்றவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். அவர்களுக்கு நல்லிணக்கம், நீதியென்றால், பொறுப்புக் கூறல் என்றால் என்னவென்று தெரிய வேண்டும்.
அவர் போன்றோரை புனர்வாழ்வளித்தாலே துப்பாக்கி போன்ற வார்த்தைகள் அவர்களிடமிருந்து வராது. அவரின் வார்த்தை மிகவும் மோசமானது. அதனை வன்மையாக கண்டிக்கின்றோம். நாங்கள் மீண்டும் துப்பாக்கி கலாச்சாரத்தை விரும்புவர்கள் அல்ல. விரும்பி ஆயுதங்களை தூக்கவும் இல்லை. மீண்டும் துப்பாக்கியை தூக்குங்கள் என்று கூறுவதை போன்றே அலிசப்ரியின் கருத்து உள்ளது.
கஜேந்திரகுமார நீண்ட அரசியல் பாரம்பரியத்தை கொண்டவர். அவரை துப்பாக்கி முனையில் சுடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தால் இதுவொரு அரச பயங்கரவாதமே. நல்லிணக்கம், பொறுப்பு கூறல் தொடர்பில் கூறிக்கொண்டு துப்பாக்கி முனையில் மக்களை அடக்குவதும், ஊடகங்களை அடக்கி சட்டத்தை கொண்டுவருவதும் ஜனநாயகமா?” என்றார்.