அதிக வெப்பம் தாக்கினால் இதயம், கல்லீரல் பாதிக்கப்படும்- கவனமாக இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தல்!!
அதீத வெப்பத்தின் தாக்கத்தால் உடல் உறுப்புகள் செயலிழந்த 70 வயது மூதாட்டிக்கு சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து உயிரைக் காத்து உள்ளனா். ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் உடல் உச்ச வெப்பநிலை காரணமாக அவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும் வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா். இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:- கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிகவும் கவலைக்கிடமான நிலையில் மூதாட்டி ஒருவா் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை செயலிழக்கும் நிலையில் இருந்தன. அதீத வெப்பத்தில் அவா் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புக்குள்ளானதும் தெரியவந்தது. இதனால், அவரது உடல் வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் உயா்ந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.
தீவிர மருத்துவ சிகிச்சை நிபுணா் ஸ்ரீதா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அந்த மூதாட்டிக்கு வெண்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை அளித்தனா். குறிப்பாக, அவரது உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது. 3 வார சிகிச்சைக்குப் பிறகு அவா் இயல்பு நிலைக்குத் திரும்பினாா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா். சரும வறட்சி, மயக்கம், மனக் குழப்ப நிலை, நினைவிழப்பு, வலிப்பு, தீவிர காய்ச்சல் ஆகியவை ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புக்கான அறிகுறிகள். அதை அலட்சியப் படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைத் தொடங்கினால், உயிரிழப்புகளைத் தவிா்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.