என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை- மாணவ அமைப்பினர் போராட்டம்!!
கேரள மாநிலம் கோட்டயம் காஞ்சிரப்பள்ளி பகுதியில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இங்கு திருப்பூணித்துறையைச் சேர்ந்த மாணவி ஸ்ரத்தா சதீஷ் (வயது20) இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று கல்லூரி ஆய்வுக்கூடத்துக்குச் சென்றபோது அவரிடம் இருந்த செல்போனை ஆசிரியர்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் அவர் விடுதி அறையில் மின் விசிறியில் தூக்கில் தொங்கினார். இதை பார்த்த சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். கல்லூரி நிர்வாகிகள் விரைந்து வந்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்ரத்தா சதீஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சக மாணவர்கள் கூறும்போது, மாணவியை ஆசிரியர்கள் மனதளவில் காயப்படுத்தியதால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர். மாணவியின் பெற்றோர் கூறுகையில், ‘எங்கள் மகளை கல்லூரி ஆய்வகத்தில் துன்புறுத்தியிருக்கிறார்கள்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதில் அலட்சியம் காட்டியதுடன், டாக்டரிடம் தூக்கில் தொங்கியதை மறைத்து தலைச்சுற்றி கீழே விழுந்ததாக கூறியுள்ளனர். இதனால், சரியான முறையில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு, எங்கள் மகள் இறந்தார்’ என்றனர். இதற்கிடையே மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த வழக்கில் சமரசம் ஏற்படுத்த கல்லூரி நிர்வாகம் முயல்வதாக கூறி மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த சமயத்தில் சில மாணவர்களை போலீசார் தாக்கியதாகப் புகார் எழுந்தது.
இதற்கிடையே கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டது. மாணவி மரணம் குறித்து மாநில இளைஞர் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கிறது. இந்தநிலையில், நேற்று கேரள உயர் கல்வித்துறை மந்திரி பிந்து தலைமையில் கல்லூரியில் வைத்து அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மந்திரி வாசவன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின் மந்திரி பிந்து கூறும்போது, ‘மாணவி தற்கொலை குறித்து கேரள குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்துவார்கள்’ என்றார். இதை தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக மாணவ அமைப்பினர் அறிவித்து உள்ளனர்.