திரும்ப பெறும் என்று அறிவிக்கப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளில் அதிக அளவில் டெபாசிட்!!
2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அறிவித்தது. கடந்த 23-ந் தேதி முதல் இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி தொடங்கியது. செப்டம்பர் 30-ந் தேதி வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தொடக்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி குறைவாகவே இருந்தது. தற்போது அதிக அளவில் டெபாசிட் செய்யப்படுகின்றன. 2000 ரூபாய் நோட்டுகளின் பரிவர்த்தனைகள் வங்கிகளில் குறிப்பிடத்தக்க எழுச்சியை காண முடிகிறது. வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிக அளவில் பங்களிப்பு இருந்தாலும் வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் ரூ.2000 நோட்டுக்களை மாற்றி வருகின்றனர்.
கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் 2000 ரூபாய் நோட்டு பரிவர்தனைகள் அதிகரித்துள்ளதாக தனியார் வங்கி ஒன்று தெரிவித்துள்ளது. மே 23 முதல் ஜூன் 5 வரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் டெபாசிட் மற்றும் பரிமாற்றம் மூலம் ரூ.1,950 கோடி மதிப்பிலான 97 லட்சம் யூனிட் 2,000 நோட்டுகளை பரிவர்த்தனை செய்துள்ளது. இதில் சுமார் 78 லட்சம் பிங்க் நோட்டுகள் ரூ.1,600 கோடிக்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. டெல்லி, அகமதாபாத், கோவை ஆகிய நகரங்களில் ரூ.2000 நோட்டுக்கள் அதிகரித்துள்ளதாக ஐ.ஓ.பி. வட்டாரங்கள் தெரிவித்தன.