வடக்கு ஆசிரியர் நியமனம் சிக்கல்தான் எதுவும் செய்ய முடியாது !!
2019/2020 ஆம் ஆண்டில் கல்வியியல் கல்லூரிகளில் 8 ஆயிரம் பேர் உள்ளீர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு வர்த்தமானி அறிவித்தில் பிரகாரம் நியமிப்பதாகவும் வடக்கில் தெரிவு செய்யப்பட்டோரும் அதன்படியே நியமிக்கப்படுவதாகவும் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த, “இது சிக்கலானதுதான். ஆனாலும் எதுவும் செய்ய முடியாது. எனினும் ஏதாவது மாற்று வழிகளை கண்டறிய முயற்சிக்கின்றேன்” என்று தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினா நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி. ஸ்ரீதரன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ஆசிரியர் கலாசாலைகள், கல்வியியல் கல்லூரிகளிலிருந்து மெரீட் , மாவட்ட அடிப்படையில் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் வெளிமாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு வழங்கப்படும் 37 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வெளிமாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்படும் இவர்களினால் போக்குவரத்து, தங்குமிட வாடகை, உணவுச் செலவு போன்றவற்றை எப்படி சமாளிக்க முடியும்? எனவே அவர்களை வடக்கு மாகாணத்திலேயே நியமிக்க முடியாதா?” என்று ஸ்ரீதரன் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், “2019/2020 ஆம் ஆண்டில் கல்வியியல்
கல்லூரிகளில் 8 ஆயிரம் பேர் உள்ளீர்ப்பு செய்யப்பட்டனர். கொரோனா
நெருக்கடியினால் ஆசிரியர் நியமனங்கள் தாமதமான நிலையில் விரைவில் இவர்களில்
7, 500 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கவுள்ளோம்.
இவர்களுக்கான நியமனங்களை வர்த்தமானி அறிவித்தலில் அடிப்படையிலேயே வழங்க
வேண்டியுள்ளது. அதனால்தான் ஒரு மாகாணத்தில் உள்ளவர்கள் இன்னொரு மாகாணத்துக்கு நியமிக்கப்படுகின்றனர். இது சிக்கலானதுதான். ஆனால் தவிர்க்க முடியாதது. எனினும் நான் ஏதாவது மாற்று வழிகளை கண்டறிய முயற்சிக்கின்றேன்” என்றார்.