யாழில். சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம்!! (PHOTOS)
யாழ்ப்பாணம் கன்னாதிட்டி சந்திக்கு அருகில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய, உணவகத்திற்கு 40 ஆயிரம் ரூபாய் தண்ட பணம் அறவிடப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 10ம் திகதி யாழ் மாநகர பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்களின் வழமையான குழு பரிசோதனையில் கன்னாதிட்டி வீதியில் அமைந்துள்ள ஓர் உணவகம் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கியமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து மே மாதம் 12ம் திகதி உணவக உரிமையாளரிற்கு எதிராக யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதவான் கடையினை சீல் வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகரிற்கு உத்தர விட்டார். தொடர்ந்து பொது சகாதார பரிசோதகரால் கடை சீல் வைத்து மூடப்பட்டது.
அந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த வழக்கு நீதிமன்றில் மீள விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது உணவக உரிமையாளரிற்கு 40 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.
அத்துடன் பொது சுகாதார பரிசோதகரால் உணவக திருத்த வேலைகள் பூர்த்தியடைந்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கடையினை மீள திறப்பதற்கான அனுமதியையும் நீதிமன்றம் வழங்கியது.