இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை விரைவில் குறைகிறது? !!
சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வந்தன. இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த ஆண்டு பாதிவரை பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தது. சில மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் விலை உச்சம் தொட்டதால் பொது மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்பிறகு கடந்த ஓராண்டுக்கு மேலாக பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. இதற்கிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஆனாலும் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் இதுவரை மாற்றம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பி.பி.சி.பி. கள் போன்ற நிறுவனங்கள் 20 ஆயிரம் கோடி வரை லாபம் பார்த்து உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 140 டாலருக்கு விற்கப்பட்ட ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை கடந்த சில மாதங்களாக 75 டாலராக குறைந்துள்ளது. ஆனாலும் எண்ணெய் நிறுவனங்கள் இதுவரை விலையை குறைக்கவில்லை. எனவே இந்தியாவிலும் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. இது தொடர்பாக மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதே நேரம் கொரோனா தொற்று நோய் காலகட்டத்தில் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக ஏற்பட்ட இழப்புகளை தங்கள் நிறுவனம் இதுவரை ஈடுசெய்யவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் மத்திய அரசிடம் கூறப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் 2022-2023-ம் நிதியாண்டில் 4-வது காலாண்டில் நல்ல லாபம் பார்த்துள்ளன. மேலும் 2023-2024-ம் நிதியாண்டிலும் முதல் காலாண்டில் நன்றாக இருந்தால் விலையை குறைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்களில் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கும்படி மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே விரைவில் பெட்ரோல்-டீசல் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.