பா.ஜ.க. முதல்-மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அவசர அழைப்பு!!
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜனதா கட்சி தாயராகி வருகிறது. கடந்த திங்கட்கிழமை பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது பற்றி ஆலோசனை நடத்தினார். அதன் அடிப்படையில் ஆட்சியிலும், கட்சியிலும் சில மாற்றங்களை கொண்டு வர பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். அடுத்த வாரம் வியாழக்கிழமைக்குள் இது தொடர்பாக சில அறிவிப்புகளை வெளியிடவும் இவர் தீர்மானித்துள்ளார்.
இந்த நிலையில் பா.ஜ.க. ஆளும் மாநில முதல்-மந்திரிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அவர்களுடன் பாராளுமன்ற தேர்தல் மற்றும் இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள 5 மாநில சட்டசபை தேர்தல் குறித்து மோடி விரிவான ஆலோசனை நடத்த உள்ளார். நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) இந்த ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது. ஒவ்வொரு மாநில முதல்-மந்திரியுடனும் நீண்ட விவாதத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனவே 12-ந் தேதி திங்கட்கிழமை வரை பா.ஜ.க. முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துவார் என்று தெரியவந்துள்ளது.
5 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய வியூகம் வகுப்பது தொடர்பாகவும் அவர்கள் பேச இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் நட்டா, பொதுச் செயலாளர் சந்தோஷ் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை எதிர்கொள்வது பற்றி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. மேலும் வருகிற 23-ந் தேதி எதிர்க்கட்சிகள் பாட்னாவில் ஒன்றுகூடி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.