முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் வருகை- மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகிறார் !!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணமாக நாளை (சனிக்கிழமை) மாலை சேலம் வருகிறார். தனி விமானம் மூலம் ஓமலூர் விமான நிலையத்துக்கு வரும் அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சேலம் மாவட்ட தி.மு.க. சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் சேலம் 5 ரோடு ரத்தினவேல் ஜெயக்குமார் திருமண மண்டபத்தில் நடைபெறும் சேலம் மத்திய, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு மாவட்டங்களின் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். கூட்டம் முடிந்ததும் கட்சி முக்கிய நிர்வாகிகளை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை இரவு சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஓய்வு மாளிகையில் தங்குகிறார். நாளை மறுநாள்(11-ந் தேதி) காலை 8 மணிக்கு அரசு பயணியர் மாளிகையில் இருந்து புறப்பட்டு செரி ரோடு, அம்பேத்கார் சிலை, தமிழ் சங்கம் வழியாக அறிஞர் அண்ணா பூங்கா வருகிறார்.
அங்கு நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைக்கிறார். தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.97 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஈரடுக்கு அடுக்கு பஸ் நிலையம், பெரியார் பேரங்காடி, வ.உ.சி மார்க்கெட், நேரு கலையரங்கம் ஆகியவற்றையும் திறந்து வைக்கிறார். அதன் பின்னர் காலை 10 மணிக்கு கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு சேலம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் அரசு சட்டக் கல்லூரி, இளம்பிள்ளை கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்து, முடிவுற்ற பணிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அன்று மாலை மேட்டூர் செல்லும் முதலமைச்சர், இரவில் அங்கு ஓய்வு எடுக்கிறார். 12-ந் தேதி காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுகிறார். பின்னர் விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சியினர் திரளாக பங்கேற்க இருக்கிறார்கள். முதலமைச்சர் வருகையை ஒட்டி 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழாவுக்காக கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமான பந்தல், மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மைதானம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.