மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்காவில் புலம்பெயரும் முயற்சி தோல்வியில் 3,800 பேர் உயிரிழப்பு: ஐ.நா!!
மெனா (MENA) எனப்படும் மத்திய கிழக்கு மற்றும் வடஆப்பிரிக்கா நாடுகள் வழியாக உள்ள இடப்பெயர்வு பாதைகளை பயன்படுத்தி புலம்பெயர்வோர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக நிலை ஏற்படுவதாகவும், இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 3,800 பேர் எனவும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) தெரிவித்துள்ளது. சஹாரா பாலைவனம் மற்றும் மத்தியதரைக் கடல் பகுதிகளை கடந்து செல்ல முயற்சி மேற்கொள்ளும்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அடங்கும். இந்த ஆபத்தான பலி எண்ணிக்கை, மெனா பிராந்தியத்திற்குள்ளே உள்ள இடப்பெயர்வு பாதைகளிலும், அங்கிருந்து வெளியேறும் வழிகளிலும் புலம்பெயர்வோர்களுக்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்பை உறுதி செய்வதில் உடனடி கவனமும் ஒருங்கிணைந்த முயற்சிகளும் தேவை என்பதை காட்டுகிறது என்று அந்த அமைப்பிற்கான மத்தியகிழக்கு மற்றும் வடஆப்பிரிக்கா மண்டல இயக்குனர் ஓத்மான் பெல்பீசி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை மேலும், “இந்த மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ளவும் மேன்மேலும் ஏற்படக்கூடிய உயிர் இழப்புகளைத் தடுக்கவும் சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பையும் அதிகரிக்க வேண்டும்” எனவும் வலியுறுத்துகிறது. இதன்படி, 2021-ல் பதிவு செய்யப்பட்டதை விட இறப்பு எண்ணிக்கை 11% அதிகம் என்றும், 6 ஆண்டுகளுக்கு முன்பு 4255 ஆக இருந்தது. அதன்பின் தற்போதுதான் ஒரு வருடத்தில் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பலியானோர்களில் 92 சதவீதம் பேர் அடையானம் காணப்படவில்லை என்பது வேதனைக்குரியது.
மேற்கூறிய பகுதிகளிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் கடல் வழிகளில், லெபனானில் இருந்து கிரீஸ் மற்றும் இத்தாலிக்கு புலம்பெயர்வுக்காக படகுகளில் பயணிப்போருக்கு ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும், இப்பிராந்தியத்தில் அதிக தரைவழி உயிரிழப்புகள் போரால் பாதிக்கப்பட்ட ஏமன் நாட்டில் பதிவாகியுள்ளதாகவும், மேலும் அங்கு புலம்பெயர்வோருக்கு எதிராக வன்முறைகளும் அதிகரித்திருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவிக்கிறது. ஏமன் மற்றும் சவுதி அரேபியாவிற்கு இடையேயான பாதையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 795 பேரில் பெரும்பாலானோர் எத்தியோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள். ஏமனின் வடக்கு மாகாணமான சாதாவில் பெரும்பாலான இறப்புகளும், லிபியாவில் 117 இறப்புகளும், மற்றும் அண்டை நாடான அல்ஜீரியாவில் 54 இறப்புகளும் பதிவாகியுள்ளன.