;
Athirady Tamil News

ஜூன் மாதம் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பம்: ஐரோப்பிய ஒன்றியம்!!

0

காப்பர்நிகஸ் காலநிலை மாற்ற சேவையின் (C3S) துணை இயக்குனர் சமந்தா பர்கெஸ் தெரிவித்திருப்பதாவது:- Powered By VDO.AI உலகளவில் வெப்பம் ஜூன் மாதம் வழக்கத்தை விட அதிகமாக பதிவாகியுள்ளது. எல் நினோ காலக் கட்டம் தொடர்வதால் 2023-ம் வருடத்தை விட 2024-ம் வருடம் மிக வெப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். உலகளாவிய காலநிலை எவ்வளவு வெப்பமாக இருக்கிறதோ, சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றங்களும் நிகழ்வுகளும், தீவிரத்திலிருந்து மேலும் தீவிரமாக மாறலாம். புவி வெப்பமடைதலின் அளவிற்கும், தொடர் மற்றும் தீவிர நிகழ்வுகளுக்கும் இடையில் தொடர்பு உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐரோப்பாவின் காப்பர்நிகஸ் அமைப்பு தெரிவித்திருப்பதாவது:- இந்த வருடத்தின் ஜூன் மாத முதல் சில நாட்களிலேயே, உலகளாவிய சராசரி வெப்பநிலையானது, இதுவரை பதிவான ERA5 தரவுப் பதிவுகளின்படி, கணிசமான அளவு வித்தியாசத்தில் அதிகமாக இருந்தது. தரவுகளின்படி, தினசரி உலகளாவிய சராசரி வெப்பநிலை, ஜூன் 7-லிருந்து ஜூன் 11-க்கு இடைபட்ட காலத்தில் 1.5 செல்சியஸ் வரம்பின் அருகாமையிலோ அதற்கு மேலோ இருந்துள்ளது. மேலும், ஜூன் 9 அன்று அதிகபட்சமாக 1.69 செல்சியஸை தொட்டது. இந்த ஆண்டு ஜூன் 8-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில், உலகளாவிய சராசரி தினசரி வெப்பநிலை, அதே நாட்களில் முந்தைய பதிவுகளை விட 0.4 செல்சியஸ் வெப்பமாக இருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் காப்பர்நிகஸ் பிரிவின் ஆராய்ச்சியாளர்களின் அறிக்கையில், ஜூன் மாத தொடக்கத்தில் உலகளாவிய மேற்பரப்பு காற்றின் வெப்பநிலை முதல் முறையாக தொழில்துறை காலகட்டங்களுக்கு முந்தைய நிலைகளை விட 1.5 டிகிரி செல்சியஸ் (2.7 ஃபாரன்ஹீட்) உயர்ந்துள்ளதாக தெரிவித்தனர். உலக-சராசரி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், அடிக்கடி 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பை மீறுவதாலும், அதிகப்படியான வெப்பத்தால் ஏற்படும் ஒட்டுமொத்த விளைவுகள் தீவிரமடையும் என்றும் இதனை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்பது அவசியம். 1.5 செல்சியஸ் வரம்பின் அருகாமையில் கடந்து சென்ற சில நாட்கள், மூன்று வருட, “லா நினா” பருவநிலை கட்டமாக வருகிறது. இது, எதிர்மாறாக, “எல் நினோ” பருவநிலை காலகட்டத்திற்கு வழிவகுத்திருக்கிறது. இதன் மூலம் மற்றொரு அரை டிகிரி அல்லது அதற்கு மேலும் சராசரி வெப்பநிலை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதே பிரச்னைக்காக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வியாழனன்று பேசும்பொழுது:- உலகம் ஒரு பருவநிலை மாற்ற பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றாலும் அதற்கு உலக நாடுகள் ஆற்ற வேண்டிய எதிர்வினை போதுமானதாக இல்லை.

இந்த நூற்றாண்டின் இறுதியில் வெப்பநிலை, தற்போதிருக்கும் காலநிலைக் கொள்கைகளால், ஐ.நா.வின் இலக்கான 1.5 டிகிரி செல்சியஸை விட இரண்டு மடங்கு அதிகமாகலாம். தொழில்துறைக்கு முந்தைய காலங்களை விட சராசரியாக 2.8 டிகிரி செல்சியஸ் கூடுதல் வெப்பநிலைக்கு செல்லவும் வாய்ப்பிருக்கிறது. நாம் கண்களை அகல திறந்து வைத்துக் கொண்டே ஒரு பேரழிவை நோக்கிப் பயணிக்கிறோம். ஆனால் இதற்கு தீர்வு காண வேண்டியவர்கள், தங்களுக்கு விருப்பமான சிந்தனை, நிரூபிக்கப்படாத தொழில்நுட்பங்கள் மற்றும் “சில்வர் புல்லட்” தீர்வுகள் ஆகியவற்றையே நம்ப தயாராக உள்ளனர். விழித்தெழுந்து முன்னேற வேண்டிய நேரம் இது. தூய்மையான ஆற்றலை நோக்கி நகரும் முயற்சியில் ஒரு சிறு மாற்றத்தை மட்டும் மேற்கொள்ளாமல், மனித உயிர்களின் வாழ்வோடு பொருந்தாத தயாரிப்பிகளிலிருந்து விலகி ஒரு பெரிய அளவிலான உருமாற்றத்தை புதைபடிவ எரிபொருள் தொழிற்துறையானது மேற்கொள்ள வேண்டும்.

காலநிலை பிரச்னைகளை தீர்ப்பதற்கான வாக்குறுதிகளிலும், கடமைகளை நிறைவேற்றுவதிலும் நாடுகள் வெகுதொலைவில் உள்ளன. லட்சியம், நம்பிக்கை, ஆதரவு, ஒத்துழைப்பு எதுவுமில்லாத ஒரு நிலையை நான் காண்கிறேன். இப்பிரச்னையில், தெளிவு மற்றும் நம்பகத்தன்மையைச் சுற்றி ஏராளமான சிக்கல்கள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். பூமி, எல் நினோ கட்டத்தில் நுழையும்போது ஜூன் தொடக்கத்தில் ஏற்பட்ட வெப்பநிலை பல ஆண்டுகள் நீடிக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.