உக்ரைனில் கைதிகள் சித்ரவதை.. ரஷியாவின் தேசிய கொள்கையா..? ஐ.நா. சபை கடும் அதிருப்தி!!
ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது 2022ம் வருடம் பிப்ரவரி மாதம் ராணுவ நடவடிக்கையை தொடங்கி முக்கிய பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. ரஷியாவுக்கு உக்ரைன் படைகள் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷியாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைன் போரில் கைது செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் போர்க் கைதிகளை ரஷிய படைகள் சித்ரவதை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த செயல் ரஷிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயலாக இருக்கலாம் என ஐ.நா. சபை கூறியுள்ளது.
இதுபற்றி ஐ.நா. சபையின் அறிக்கையாளரான அலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் கூறியிருப்பதாவது: உக்ரைனில் உள்ள ரஷியப் படைகள், உக்ரைன் குடிமக்கள் மற்றும் ராணுவ போர்க்கைதிகளை தொடர்ச்சியாக, வேண்டுமென்றே உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் துன்புறுத்துவதாக சில அறிக்கைகள் மற்றும் சாட்சியங்கள் மூலம் அறிந்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். இந்த சித்ரவதை நடவடிக்கைகளில் மின்சார ஷாக் கொடுத்தல், முகத்தை மூடி தாக்குதல் மற்றும் மரண அச்சுறுத்தல்கள் ஆகியவை அடங்கும். இந்த குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப்பட்டால், அவை அரசால் அங்கீகரிக்கப்பட்ட சித்ரவதையின் ஒரு மாதிரியாகவும் இருக்கலாம் என தோன்றுகிறது. இந்த சித்ரவதைகளை பார்க்கும்போது, உயர் அதிகாரிகளிடமிருந்து நேரடி அங்கீகாரம் பெற்று, வேண்டுமென்றே கொள்கை ரீதியாக செய்ததுபோல் தெரிகிறது.
சித்ரவதை ஒரு போர்க்குற்றம் மட்டுமின்றி இந்த நடைமுறை மனிதகுலத்திற்கே எதிரான குற்றமாகும். உயர்ந்த இடத்திலிருந்து வந்த உத்தரவு அல்லது அரசின் கொள்கை வழிகாட்டுதலுக்கு கீழ்ப்படிந்து கைதிகளை சித்ரவதை செய்வதை நியாயப்படுத்த முடியாது. சித்ரவதை செய்த நபர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சித்ரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுபவர்கள், உக்ரைனுக்குள் ரஷியப் படைகள் கட்டுப்பாட்டில் உள்ள தங்குமிடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உள் உறுப்புகள் சேதம் அடைந்துள்ளன. எலும்பு முறிவுகள், பக்கவாதம் மற்றும் நாட்பட்ட நோய்களின் தாக்கம் காணப்படுகிறது. சிலர் பிரமை பிடித்தவர்கள் போன்று இருப்பதாகவும் கூறப்படுகிறது.
போர் இன்னும் நீண்ட காலம் நீடித்தால், சித்ரவதை மற்றும் பிற மனிதாபிமானமற்ற செயல்கள் குறித்து மேலும் பல அறிக்கைகள் வெளிவரலாம். பொதுமக்கள் மற்றும் போர்க்கைதிகள் எல்லா நேரங்களிலும் பாதுகாக்கப்படுவதையும் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுவதையும் அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். மேலும், ஐ.நா. மனித உரிமை நிபுணர்களுடன் இணைந்து ரஷியாவிற்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், அதில் தங்கள் கவலைகளை தெரிவித்திருப்பதாகவும் அலிஸ் ஜில் எட்வர்ட்ஸ் கூறியுள்ளார்.