க.பொ.த சாதாரண தர பரீட்சை முறை இரத்து செய்யப்படுமா? !!
13 வருட கல்வியை வழங்குகின்ற போது சாதாரண தர பரீட்சை அவசியமா என்ற கேள்வி எழுகின்றது. சாதாரண தர பரீட்சை அவசியமில்லை என்பதே பலரதும் நிலைப்பாடாக உள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று (16) இடம்பெற்ற 2018- 2022 கல்வியாண்டு தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
கல்விக்கான தனியானதொரு அமைச்சர்கள் குழுவை நாம் நியமித்துள்ளோம். கல்வித் தொடர்பில் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரங்களை அவர்களுக்கு வழங்குவோம். தற்போது அது தொடர்பிலான அறிக்கையொன்றை தேசிய கல்விக்குழு எம்மிடத்தில் கையளித்துள்ளது. அதற்கு மேலதிகமாக பிரமரின் செயலாளர் தலைமையில் கல்வி நவீனமயபடுத்தல் தொடர்பிலான குழுவொன்று ஒவ்வொரு துறைசார் குழுக்களையும் பிரதிநித்துவப்படுத்தும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த அனைத்து அறிக்கைகளும் ஓகஸ்ட் மாதத்திற்கு முன்பாக எனக்கு கிடைக்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளேன். அதனூடாக 21ஆம் நூற்றாண்டிற்கு பொருத்தமானதும் 2050ஆம் ஆண்டுக்கு பொருத்தமானதுமான கல்விக் கொள்கையொன்றை உருவாக்க எதிர்பார்க்கப்படுகின்றது.
தரம் 8 இல் பரீட்சையில் சித்தி பெற்றமை மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்திபெறவில்லை என்ற காரணங்களுக்காக மாணவர்களின் கல்வியை இடைநிறுத்த அனுமதிக்க கூடாது. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட பாடசாலை கல்வியை கட்டாயமாக வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்துள்ளது. அரசாங்கம் என்ற வகையில் அதனை நாம் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளோம். அதேபோல் அதற்கு பொருத்தமான வகையில் பாடசாலை கல்வியையும் கட்டமைக்க வேண்டும்.
அதேபோல் சங்கீதம்,கலைகள் மீது ஆர்வம் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களது தெரிவுகளையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும். குறிப்பாக ஸ்கெண்டினேவிய நாடுகளில் அவ்வாறான வாய்ப்புக்கள் உள்ளன. அதுபோன்ற வேலைத்திட்டங்களுக்கு நாமும் செல்ல வேண்டும். உயர்தர பாடங்கள் மாத்திரமின்றி வாழ்க்கைக்கு அவசியமான கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அதனூடாக கிட்டும்.
13 வருட கல்வியை வழங்குகின்ற போது சாதாரண தர பரீட்சை அவசியமா என்ற கேள்வி எழுகின்றது. சாதாரண தர பரீட்சை அவசியமில்லை என்பதே பலரதும் நிலைப்பாடாக உள்ளது. உலகின் அபிவிருத்தி அடைந்த நாடாக விளங்கும் அமெரிக்காவே அதற்கு உதாரணமாகும். அங்கு சாதாரண தர பரீட்சையும் இல்லை உயர்தர பரீட்சையும் இல்லை. நம்மால் அதனை செய்ய முடியும் என நான் நம்பவில்லை. இருப்பினும் சாதாரண தர பரீட்சை தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியது அவசியமாகும். அதனை மாற்று முறையில் நடத்துவதா அல்லது சித்தி பெறல், சித்தி பெறாமையை அடிப்படையாக கொண்டு நடத்துவதா என தீர்மானிக்க வேண்டும்.
13 வருட கல்வியை பெற்றுக்கொடுக்கின்ற போது அதற்கு உகந்த வகையில் பரீட்சைகளை நடத்த வேண்டிய பொறுப்பு எம்மை சார்ந்துள்ளது. தற்போது பரீட்சை தினங்கள் மாறுகின்றன ஜனவரி முதல் டிசம்பர் வரையில் ஒவ்வொரு திகதியில் உயர்தர பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. அதேபோல் டிசம்பர் மாதத்தில் பரீட்சை இடம்பெறுவதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்துக்கொடுக்க வேண்டியது அவசியமாகும். அதன்படி பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்த வேண்டிய பொறுப்பு பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஏற்படும்.
பல்கலைக்கழக பட்டத்தை பெற்றுக்கொள்ளும் போது எனக்கு 21 வயது. குறைந்தபட்சம் 23 வயதிலாவது பல்கலைக்கழங்களிலிருந்து வெளியேற வேண்டியது அவசியமாகும். அதேபோல் இன்று பல புதிய பாடத்திட்டங்கள் உள்ளன. ஆங்கில கல்வி மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது. ஆங்கில மொழி தெரியவில்லை என்ற நிலைமை எவருக்கும் ஏற்படக்கூடாது என்றார்.