1 ரூபாய் பிரியாணி வாங்க அலை மோதிய கூட்டம்- மோதல் ஏற்பட்டதால் போலீசார் ஓட்டலை மூடினர்!!
தெலுங்கானா மாநிலம், கரீம் நகரில் புதிய ஓட்டல் நேற்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு மதியம் 2-30 மணிக்கு மேல் ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்றும் பிரியாணி வாங்க வருபவர்கள் ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் கட்டாயம் கொண்டு வர வேண்டும் என ஓட்டல் நிர்வாகம் விளம்பரம் செய்து இருந்தது. மேலும் ஒரு நபருக்கு ஒரு பிரியாணி மட்டுமே வழங்கப்படும் என நிபந்தனை விதிக்கப்பட்டு இருந்தன. விளம்பரத்தை கண்ட சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பிரியாணியை வாங்கி சாப்பிட்டே தீர வேண்டும் என எண்ணினர். சுட்டெரிக்கும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஓட்டல் முன்பு உள்ள சாலையில் ஏராளமானோர் திரண்டு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஒரு ரூபாய் பிரியாணி குறித்து வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வைரலானதால் நேரமாக நேரமாக கூட்டம் அதிகரித்தது. பிரியாணி வாங்க வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் முக்கிய சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிரியாணி வழங்க தொடங்கியபோது எப்படியும் பிரியாணி வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் வாலிபர்கள் ஒருவருடன் ஒருவர் முண்டியடித்து செல்ல முயன்றனர். அப்போது அவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு சிலர் ஓட்டலுக்குள் முண்டியடித்து சென்று ஒரு ரூபாய் நாணயத்தை கொடுக்காமலேயே கடைக்காரரிடம் இருந்து பிரியாணியை பறித்து சென்றனர். நிலைமை கட்டுக்குள் அடங்காமல் போகவே ஓட்டல் உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர். போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் போலீசார் ஓட்டலை தற்காலிகமாக இழுத்து மூடினர். இதையடுத்து வரிசையில் காத்திருந்தவர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.