மங்களூரு அருகே ரூ.7¾ லட்சம் மின் கட்டணம் வந்ததால் வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி!!
மங்களூரு அருகே நடந்த இ்ந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:- கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு ஜூலை 1-ந்தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதற்கிடையே மின்கட்டணத்தை அதிகரித்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எப்போதும் மாதந்தோறும் 5-ந்தேதி மின்சார பயன்பாட்டை அளவீடு செய்து கட்டண ரசீது வழங்குவது வழக்கம். ஆனால் கடந்த மே மாத மின்கட்டணம் அளவீடு செய்து ரசீது தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது.
அதுவும் ரூ.200, ரூ.300 கட்டணம் வந்து கொண்டிருந்த வீட்டு மின் இணைப்பு உடையவர்களுக்கு இரு மடங்கு, முன்று மடங்கு கட்டணம் வந்துள்ளதாக ரசீது கொடுக்கப்பட்டு இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லாலை சேர்ந்தவர் சதாசிவ ஆச்சார்யா. இவரது வீட்டுக்கு மாதந்தோறும் சராசரியாக ரூ.3 ஆயிரம் மின்சார கட்டணமாக வந்துள்ளது. இந்த நிலையில் மே மாத மின்சார கட்டணமாக அவரது வீட்டுக்கு ரூ.7 லட்சத்து 71 ஆயிரத்து 72 வந்துள்ளதாக மின்அளவீடு செய்த மின்வாரிய ஊழியர் ரசீது கொடுத்துள்ளார். அந்த ரசீதில் 99 ஆயிரத்து 338 யூனிட் மின்சாரம் பயன்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சதாசிவ ஆச்சார்யா, மின்வாரிய ஊழியரிடம் மின்கட்டணம் பல மடங்கு கூடுதலாக வந்து இருப்பது பற்றி கேட்டுள்ளார். அதற்கு அவர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று புகார் கூறும்படி கூறியுள்ளார். அதையடுத்து சதாசிவ ஆச்சார்யா, அருகில் உள்ள ‘மெஸ்காம்’ மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று புகார் செய்தார். பின்னர் அதிகாரிகள் ரூ.2,833 மின்கட்டணமாக செலுத்தும்படி கூறி புதிய மின்கட்டண ரசீதை வழங்கியுள்ளனர். அதன்பிறகே அவர் நிம்மதி பெருமூச்சுவிட்டார். தவறான மின் அளவீடு செய்வதில் இந்த குளறுபடி நடந்து இருப்பதாக மெஸ்காம் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.