தேர்தல் பிரசார தலைமையை ஏற்க வாருங்கள்: நவாஸ் ஷெரீப்பிற்கு பாக். பிரதமர் அழைப்பு !!
பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷாபாஸ் ஷெரீப். இவர் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப் அவர்களின் சகோதரர் ஆவார். நவாஸ் ஷெரீப், உடல்நல காரணங்களுக்காக நவம்பர் 2019 முதல், லண்டனில் வசித்து வருகிறார். பாகிஸ்தானுக்கு மீண்டும் வருவதற்கு மறுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. Powered By VDO.AI இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியின் முன்னாள் தலைவர் நவாஸ் ஷெரீப், மீண்டும் நாட்டிற்கு திரும்பி, தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்தி, நான்காவது முறையாக பிரதமராக வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் மத்திய பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய ஷெரீப் தெரிவித்ததாவது:- மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானுக்கு திரும்பிய பிறகு கட்சி கூட்டத்தை நடத்தி, PML-Nன் தலைவர் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைப்பதற்காக காத்திருக்கிறேன்.
விரைவில் நடத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏறுபட்டுள்ளதால் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. நவாஸ் ஷெரீப் பாகிஸ்தானுக்கு திரும்பியதும் அரசியலின் வரைபடமே மாறுவதை நீங்கள் காண்பீர்கள். கட்சிக்கு இளம் தலைமை தேவை. மரியம் நவாஸின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். ஷெபாஸ் ஷெரீப் கட்சி தலைவராவதற்கு முன்பு, மூன்று முறை பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் அதன் தலைவராக இருந்தார். ஆனால் உச்சநீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவர் கட்சிப் பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டதையடுத்து, ஷெபாஸ் கட்சி தலைமைப் பதவியை ஏற்றார்.
பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் அல்வி “உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகள் சட்டம் 2023″ல் கையெழுத்திட்ட சில வாரங்களுக்குப் பிறகு இந்த அறிக்கை வருகிறது. இதன் மூலம் நவாஸ் ஷெரீப், 60 நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தின் வாழ்நாள் தகுதி நீக்கத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான உரிமையை பயன்படுத்துவதற்கான முதல்படி தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 184(3)ன் கீழ் வரும் வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய இந்த புதிய சட்டம் வழி வகுக்கிறது.
இந்த சட்டம் கடந்த கால தீர்ப்புகளுக்கும் பொருந்தும். பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், பனாமா ஆவணங்கள் தொடர்பான வழக்கில், நவாஸ் ஷெரீப்பை ஜூலை 28, 2017 அன்று தகுதி நீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபலமான பனாமா பேப்பர் வழக்கில், தனது மகனிடமிருந்து பெறப்பட்ட சம்பளத்தை மறைத்ததற்காக, நவாஸ் ஷெரீப்பிற்கு வாழ்நாள் முழுவதும் எந்த ஒரு பொதுப் பதவியையும் வகிக்க கூடாதென பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. ஒரு வருடம் கழித்து, தேர்தல்கள் சட்டம் 2017-ஐ எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பில், உச்சநீதிமன்றம், 62 மற்றும் 63 பிரிவின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர், எந்த அரசியல் கட்சியின் தலைமை பொறுப்பையும் ஏற்க கூடாது என்றும் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.