சீனா : அமெரிக்க உறவை சீராக்க உடன்பாடு !!
சீனாவும் அமெரிக்காவும் தமக்கு இடையில் அதிகரித்து வரும் பதட்டத்தை தணிப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளன.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கனின் சீனாவிற்கான இரண்டு நாள் அதிகாரபூர்வ விஜயத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகில் போட்டிமிக்க வல்லரசு நாடுகளுக்கு இடையிலான உயர்மட்ட தொடர்புகளை சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்ததன் மூலம் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் ஆரம்பித்து வைத்துள்ளார்.
அன்ரனி பிளிங்கனுடனான பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இருதரப்பும் மேலதிக பேச்சுக்களை தொடர்வதற்கு திறந்த மனதுடன் உள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்ரனி பிளிங்கன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் தெளிவான வேறுபாடுகள் உள்ளதை அமெரிக்க உயர்மட்ட தூதுவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
தியனன்மெனில் உள்ள மக்கள் மண்டபத்தில் இடம்பெற்ற சீன அதிபருடனான 34 நிமிட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அன்ரனி பிளிங்கன் வேறுபாடுகளை பொறுப்புடன் முகாமைத்துவம் செய்வதற்கும் போட்டியானது மோதலுக்கு வழிவகுக்காமல் இருப்பதற்கும் மூத்த அதிகாரிகள் மட்டத்தில் நிலையான தொடர்புகளை பேணுவதே சிறந்த வழி என கூறியுள்ளார்.
சீனத் தரப்பிகளிடம் இருந்தும் இந்த விடயங்களே வலியுறுத்தப்பட்டதாகவும் சீரான இருதரப்பு உறவுகளை உறுதிசெய்ய வேண்டிய அவசியம் குறித்தும் இருவரும் இணங்கியுள்ளதாகவும் அன்ரனி பிளிங்கன் மேலும் கூறியுள்ளார்.
சீனா குறித்து தெளிவான பார்வையுடன் இருப்பதாகவும் பல விடயங்களில் ஆழமான மற்றும் கடுமையான வேறுபாடுகளை தாம் கொண்டுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்ரனி பிளிங்கன் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
டொனால்ட் ட்ரம்பின் காலத்து வணிகப் போர் மற்றும் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் அமெரிக்க வான்பரப்பில் பறந்த சீன உளவு பலூன்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் ஆகியவற்றினால் இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.