தினமும் கல்லாப்பெட்டியில் பணத்தை திருடி பதுக்கிய எலி !!
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மகேஷ் என்பவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் தினசரி பணம் காணாமல் போவது வாடிக்கையாக இருந்துள்ளது. இரவு நேரங்களில் தான் வைத்து செல்லும் பணம் காலை இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஒவ்வொரு நாளும் இதே நிலை நீடித்தது. இதனால் ரூ.100, 50 என வைத்து சோதித்து பார்த்த போதும் பணம் மட்டும் காணாமல் போவது தொடர்ந்துள்ளது. இதையடுத்து பணம் காணாமல் போவதை கண்டுபிடிக்க கடையில் சிசிடிவி., கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தார்.
இன்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது கல்லாவில் வைத்திருந்த பணம் காணாமல் போனது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிசிடிவி., காட்சிகளை பார்த்த போது அவர் மேலும் அதிர்ச்சிக்குள்ளானார். அதிகாலை 4 மணி அளவில் பழங்களுக்கு இடையே புகுந்து வந்த எலி ஒன்று கல்லா பெட்டியில் பிளாஸ்டிக் கூடையில் இருந்த பணத்தை எடுத்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனைத்தொடர்ந்து கடையில் இருந்த பொருட்களை வெளியேற்றி பார்த்த போது எலி தங்கியிருந்த இடத்தை கண்டறிந்தார். அதில் இது நாள் வரையில் எலி திருடிய பணம் அனைத்தும் எந்தவித சேதமும் இன்றி அங்கு கிடந்துள்ளது.
அதனை எண்ணி பார்த்த போது 1500 ரூபாய் இருந்துள்ளது. எல்லோரும் பழத்தை திருடும் எலியை தான் பார்த்திருப்போம். ஆனால் திருப்பூர் பழக்கடையில் எலி பணத்தை திருடி சேதப்படுத்தாமல் பதுக்கி வைத்த சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர்கள் முரளி, வடிவேல் நடித்த சுந்தரா டிராவல்ஸ் படத்தில் எலியின் சேட்டைகளால் முரளியும் வடிவேலும் படாதபாடுபடுவார்கள். அது போல் திருப்பூர் பழக்கடையில் தினமும் பணத்தை திருடி உரிமையாளரை எலி ஒன்று பாடாய்ப்படுத்திய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எலி பணத்தை திருடும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.