பூரி ரத யாத்திரை.. பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்து செல்லும் தேர்கள் !!
ஒடிசாவின் கடற்கரை நகரான பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகன்னாதர் ஆலயத்தின் மூலவர்களான ஜெகன்னாதர், பாலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும், தனித்தனியாக மூன்று ரதங்களில், புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பர். ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்கு புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். கோவிலில் இருந்து புறப்படும் ஜெகன்னாதர், பாலபத்திரர், தேவி சுபத்திரை ஆகியோர் குண்டிச்சா கோவில் நோக்கி செல்வார்கள். வழியில் உள்ள தங்களின் அத்தை கோயிலான மவுசிமா கோயிலுக்குச் சென்று ஓய்வு எடுப்பார்கள். குண்டிச்சா கோவிலில் இருந்து 9-வது நாள் புறப்பட்டு பூர்வீக இடத்துக்குத் திரும்புவார்கள்.
அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது. தேர்களில் ஜெகன்னாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா மூலவர்களை எழுந்தருளச் செய்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், பாரம்பரிய வழக்கப்படி தேரின் முன்பகுதியில் தங்க கைப்பிடி கொண்ட துடைப்பத்தால் பூரி நகர மன்னர் பெருக்கிச் சுத்தம் செய்து பகவானை வழிபட்டார். அதன்பின்னர் தேரோட்டம் தொடங்கியது. முதலில் பாலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேரும் புறப்பட்ட பின்பு ஜெகன்னாதர் எழுந்தருளிய தேர் புறப்பட்டது.
நாடு முழுவதிலும் இருந்து வந்திருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் ரத யாத்திரையை கண்டுகளித்து பகவானை வழிபடுகின்றனர். ரத யாத்திரையையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது கோடை காலம் என்பதமால் தன்னார்வலர்கள், பக்தர்கள் மீது தண்ணீர் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பூரி நகரில் ரத யாத்திரை தொடங்கியதையடுத்து, நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்தது. இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.