அலி சப்ரியின் பயணம் குறித்து தவறான தகவல்!!
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் எம்.யு.எம். அலி சப்ரி அண்மைக்காலமாக வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொண்டு, பொது நிதியில் கணிசமான தொகையை செலவிட்டதாக பொதுவெளியில் பரவிவரும் தவறான தகவல் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சு புதன்கிழமை (21) விடுத்துள்ள ஊடாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பின்வருவனவற்றை அமைச்சு தெளிவுபடுத்த விரும்புகின்றது:
i. வெளிநாடுகளில் முக்கியமான பலதரப்பு, பிராந்திய மற்றும் இருதரப்பு ஈடுபாடுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்கின்றார்;
ii. இந்தக் கூட்டங்கள் / மாநாடுகள் / ஈடுபாடுகளின் முக்கியத்துவம் மற்றும் எதிர்பார்க்கப்படும் பங்கேற்பு அளவைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரே இவற்றில் நேரடியாகப் பங்கேற்க வேண்டும்;
iii. கலந்துரையாடல்கள் / ஆலோசனைகளில் அமைச்சினதும், இதர வரிசை முகவர்களினதும் சிரேஷ்ட அதிகாரிகளின் நிபுணத்துவத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு, குறித்த அதிகாரிகள் இந்தக் கூட்டங்கள் / மாநாடுகள் / ஈடுபாடுகளுக்குத் தகுந்தவாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் இணைந்து செல்வது நடைமுறையானதும், அத்தியாவசியமானதுமாகும்;
iv. புதிய கருவூல சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு செலவுகளை அதிகபட்சமாக குறைத்து வருவதுடன், அத்தியாவசியமான செலவுகள் மட்டுமே அங்கீகரிக்கப்படுகின்றன.
எனவே, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினதும், அரசாங்கத்தினதும் சர்வதேசப் பங்காளிகளுடனான ஈடுபாட்டின் பின்னணியில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தனது நியமனம் / உயர் பதவியின் காரணமாக உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், நாட்டின் உள்நாட்டு மற்றும் சர்வதேசக் கடமைகளை நிறைவேற்றுவதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதையும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வலியுறுத்த விரும்புகின்றது.
அண்மைக் காலங்களிலான தெளிவான சான்றாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் சகாக்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டுப் பிரமுகர்களுடனான இந்த உயர்மட்ட நேரடிக் கலந்துரையாடல்களின் வாயிலாக இலங்கைக்கு பல உடனடியான மற்றும் நீண்ட கால நன்மைகள் கிடைத்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.