டெல்லி விவகாரம்: காங்கிரஸ் நிலை என்ன? என எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டும்- கெஜ்ரிவால் !!
டெல்லி மாநில அரசுக்கான அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளிடமும் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கேட்டு வருகிறார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதற்கிடையே நாளைமறுதினம் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்து தலைவர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால், பா.ஜனதாவை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பதற்கான முதல் படியாகும். இந்த நிலையில் ஒன்று கூடும் எதிர்க்கட்சிகள் டெல்லி மாநில அதிகாரம் பறிப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலை என்ன? என்று கேள்வி கேட்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில் ”இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தனது தெளிவான நிலையை எடுக்கும் என நம்புகிறேன். அதேவேளையில் கூட்டத்தில் கலந்து கொள்ளும் கட்சிகள், காங்கிரஸ் நிலை என்பது குறித்து கேள்வி கேட்க வேண்டும். கூட்டத்தில் விவாதிக்கப்படும் முதல் விசயம் இதுவாகத்தான் இருக்கும். கூட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு கட்சிக்கும் இந்த சட்டதிருத்தம் குறித்த அபாயம் குறித்து விளக்கம் அளிப்பேன். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை எடுத்துக் கொண்டு, அவசர சட்ட திருத்தம் எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதை விவரிப்பேன். இவ்வாறு கெஜ்ரிவால் தெரிவித்தார்.