கேரளாவில் ஒரு மாதத்தில் பருவமழையால் ஏற்பட்ட காய்ச்சலுக்கு இதுவரை 38 பேர் பலி!!
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. மழை ஆரம்பித்த பிறகு மாநிலத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். மலையோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மழை பெய்த பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதில் சிலருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு மாநில சுகாதாரத்துறை கண்காணிப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இது தவிர பாதிப்பு அதிகமாக இருந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்தனர். இருந்தும் கடந்த வாரம் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றவர்களில் இந்த மாதம் மட்டும் மாநிலம் முழுவதும் 32 பேர் பலியாகி இருந்தனர். நேற்று மேலும் 6 பேர் இறந்தனர். இவர்களையும் சேர்த்து காய்ச்சல் பாதித்து பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.