;
Athirady Tamil News

திருவேற்காட்டில் பரபரப்பு- இசைக்கலைஞரை சினிமா பாணியில் காரில் கடத்திய கும்பல்!!

0

மதுரையை சேர்ந்தவர் தேவ் ஆனந்த்(வயது29). ராப் இசைக்கலைஞர். இவர் நண்பர்களுடன் சேர்ந்து இசை கச்சேரி குழு நடத்தி வருகிறார். நேற்று இரவு அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் நண்பர்களுடன் இசை கச்சேரி நடத்தினார். பின்னர் அவர் தனது குழுவுடன் வந்து கொண்டு இருந்தார். அவர்களில் 2 பேர் திருவேற்காட்டில் தங்கி இருப்பதால் அவர்களை அங்கு இறக்கிவிட்டார். பின்னர் தேவ் ஆனந்த் கல்பாக்கம் செல்வதற்காக தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் காரில் சென்றார். திருவேற்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதியது. இதனால் தேவ் ஆனந்த் காரை நிறுத்தி விட்டு சேதம் ஏதேனும் ஏற்பட்டு இருக்கிறதா? என்று கீழே இறங்கி பார்த்தார்.

அப்போது எதிரே காரில் வந்த மர்ம கும்பல் திடீரென தேவ் ஆனந்தை சுற்றி வளைத்தனர். அவர்கள் உனது அண்ணன் பணம் தரவேண்டும் என்று கத்தியை காட்டி மிரட்டி தேவ்ஆனந்தை தங்களது காரில் ஏற்றினர். பின்னர் கடத்தல் கும்பல் தேவ்ஆனந்தை கடத்தி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனை கண்டு உடன் வந்த இசைக்குழுவை சேர்ந்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடத்தல் குறித்து அவர்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடத்தல் கும்பலை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் சினிமா பாணியில் காரின் மீது மோட்டார் சைக்கிளை மோதவிட்டு தேவ்ஆனந்தை கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் தேவ் ஆனந்தின் அண்ணன் சிரஞ்சீவி மதுரையில் சீட்டு நடத்தி பல பேருக்கு பணம் கொடுக்காமல் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக தெரிகிறது. இதனால் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட நபர்களில் சிலர் சிரஞ்சீவியை தேடி வந்து உள்ளனர். ஆனால் அவர் சிக்காததால் அவரது தம்பி தேவ் ஆனந்த் சென்னைக்கு இசைக்கச்சேரிக்கு வந்திருப்பதை அறிந்து கடத்தி சென்று இருப்பது தெரிய வந்தது. கடத்தல் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் தேவ் ஆனந்தை மீட்க தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. திருவேற்காடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கடத்தல் கும்பல் எங்கு உள்ளனர்? என்று தெரியவில்லை. இச்சம்பவம் திருவேற்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.