;
Athirady Tamil News

பாட்னாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்: நாடாளுன்ற தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை!!

0

இந்திய நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை முக்கியமான கட்சிகள் தொடங்கி உள்ளன. இந்தத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைக்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படத் தொடங்கி உள்ளது. தேர்தலுக்கான வியூகங்களை வகுப்பதில் அந்தக் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரத்தில், எதிர்தரப்பில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒரே அணியாக திரட்டி, பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு அதிரடி முயற்சி நடக்கிறது.

குறிப்பாக இமாசல பிரதேசத்திலும், கர்நாடகத்திலும் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், பா.ஜ.க. தோற்கடிக்க முடியாத கட்சி அல்ல என்ற எண்ணம் உருவாகி, மக்களவை தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவதில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முதல்- மந்திரியுமான நிதிஷ் குமார் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். இந்த விஷயத்தில் அவர் எற்கனவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி என முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித்தலைவரும், பீகார் துணை முதல்-மந்திரியுமான தேஜஸ்வி யாதவுடன் சென்று சந்தித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.

எதிர்க்கட்சிகள் கூட்டம் அதன் அடுத்த கட்டமாக, மக்களவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துவதற்காக நிதிஷ் குமார், எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தை பாட்னாவில் கூட்டி உள்ளார். பாட்னாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிற இந்தக் கூட்டம் அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், மேற்கு- வங்காள முதல்- மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ்தலைவர் சரத் பவார், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும் சிவசேனா (உத்தவ்) தலைவருமான உத்தவ் தாக்கரே, உ.பி. முன்னாள் முதல்- மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், உள்ளிட்ட 20 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மக்களவை தேர்தல் தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதுடன், தீர்மானமும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.