இந்தியாவில் எந்த பாகுபாடும் இல்லை: முஸ்லிம்களின் உரிமை குறித்த கேள்விக்கு மோடி பதில்!!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனுடன் இணைந்து நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நிருபர்களின் கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்தனர். முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து இந்தியா என்ன செய்யப்போகிறது என ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி:- நீங்கள் கேட்பது ஆச்சரியமாக உள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எங்கள் உணர்விலும், ரத்தத்திலும் ஜனநாயகம் கலந்திருக்கிறது. எங்கள் சுவாசத்திலும் ஜனநாயகம் கலந்திருக்கிறது. எங்கள் அரசியலமைப்பு சட்டத்தில் ஜனநாயகமே உள்ளது. ஜனநாயகத்திற்காக நாங்கள் வாழும்போது பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.
மனித உரிமைகளும், மனிதத்திற்கான மதிப்பும் இல்லையென்றால் ஜனநாயகம் அங்கு இருக்க முடியாது. அனைத்து சிறுபான்மையினருக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து வளங்களும், வசதிகளும் சாதி மத பேதமுமின்றி எளிதாக கிடைக்கிறது. இவ்வாறு அவர் பதிலளித்திருக்கிறார். இந்தியாவில் சிறுபான்மையினர் அடக்குமுறைக்கு ஆளாவதாக கூறி, அமெரிக்காவின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் மோடியின் நாடாளுமன்ற கூட்டமர்வு உரையை புறக்கணிக்க போவதாக அறிவித்திருந்த நிலையில் இந்த கேள்வியும் பதிலும் முக்கியத்துவம் பெறுகிறது. 2014-ம் வருடம் பிரதமர் பதவி ஏற்றதிலிருந்து இதுவரை மோடி எந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.