வெள்ளை மாளிகை விருந்து நிகழ்ச்சியில் கிரிக்கெட், நாட்டு நாட்டு பாடலை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி பேச்சு!!
வெள்ளை மாளிகையில் அமெரிக்க நேரப்படி நேற்றிரவு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். முகேஷ் அம்பானி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சையும் கலந்து கொண்டார். இந்த விருந்து நிகழ்ச்சியின்போது பிரதமர் மோடி பேசியதாகவது:- அமெரிக்காவில் பேஸ்பால் பிரபலமாக இருக்கும் நிலையில், கிரிக்கெட்டும் பிரபலமாகி வருகிறது. இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் இடம்பெறும் முயற்சியில் அமெரிக்க கிரிக்கெட் அணி தகுதிச்சுற்றில் விளையாடி வருகிறது. வெற்றிபெற எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களும் இந்தியர்கள்- அமெரிக்கர்கள் ஒருவரை ஒருவரை சிறந்த முறையில் அறிந்து கொள்கிறார்கள். இந்திய குழந்தைகள் ஸ்பைடர்மேன் ஆடை அணிந்து ஹாலோவீன் கொண்டாடுகின்றனர்.
அமெரிக்க இளைஞர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள். அமெரிக்க வாழ் இந்தியர்கள் நீண்ட தூரம் பயணித்து அமெரிக்காவின் மரியாதைக்குறிய இடத்தை பிடித்துள்ளனர். பொருளாதரம் உள்ளிட்டவைகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றியுள்ளனர். இருநாட்டு மக்களுடன் விருந்தில் கலந்து கொள்வது இந்த நேரத்தை சிறப்பானதாக்கியுள்ளது. இங்கு வந்துள்ளவர்கள் மிகவும் மதிப்பிற்குரிய சொத்துக்கள். குவாட் மாநாட்டின்போது ஜப்பானில் சந்தித்தபோது, நீங்கள் சந்திக்கும் பிரச்சினை பற்றி தெரிவித்தீர்கள். அந்த பிரச்சினையை நீங்கள் தீர்த்து இருப்பீர்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்த விருந்தில் கலந்து கொள்ள விரும்பிய அனைவரும், பொருத்தமானவர்கள் என்று நம்புகிறேன். இந்த விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
அதேபோல் முதன் பெண்மணி ஜில் பைடனுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என்னுடைய வருகையில் கவனம் செலுத்தி, பயணம் வெற்றிபெற முக்கிய பங்கு வகித்தார்கள். நேற்று (இந்திய நேரப்படி நேற்றுமுன்தினம்) எனக்காக நீங்கள் வெள்ளை மாளிகை கதவை திறந்தீர்கள்” என்றார். இன்றிரவு இந்தியா, அமெரிக்கா இடையேயான சிறந்த நட்புறவைக் கொண்டாடுகிறோம் என விருந்து நிகழ்ச்சி குறித்து அமெரிக்கா தெரிவித்தது.