திடீரென வீசிய காற்றில் சரிந்து விழுந்த மேடை.. தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் காயம் !!
ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் பட்டுலவாரி குடமில் இன்று இரவு தெலுங்கு தேசம் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் துணை முதல்வர் நிம்மகாயல சீனராஜப்பா உரையாற்றியபோது பலத்த காற்று வீசியது. மேடை ஆட்டம் கண்டது. எனினும் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். மேடையில் சிந்தமனேனி பிரபாகர், பீதலா சுஜாதா, மகந்தி பாபு மற்றும் நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர்.
அப்போது, காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் மேடை மொத்தமாக சரிந்தது. மேடையில் இருந்த சீனராஜப்பா, உள்ளிட்ட அனைவரும் மேடையுடன் விழுந்தனர். இதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னாள் எம்.பி. மகந்தி பாபுவின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த விபத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.