பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசுவதில் தவறு இல்லை: டி.கே.சிவக்குமார்!!
துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி ஏற்ற பின்பு பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். பெங்களூரு ஆர்.டி.நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வீட்டுக்கு நேற்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசி இருந்தார். முன்னதாக இந்த விவகாரம் குறித்து டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:- முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை. அவர், 2 ஆண்டுகளாக முதல்-மந்திரியாக இருந்துள்ளார்.
இதற்கு முன்பு தேவேகவுடா, எஸ்.எம்.கிருஷ்ணா, எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசி இருந்தேன். மூத்த தலைவர்களின் அனுபவத்தை பெறுவதில் தவறு எதுவும் இல்லை. அவர்களிடம் இருந்து கேட்டு தெரிந்து கொள்வதற்கு பல விஷயங்கள் இருக்கிறது. அவர்களது ஆட்சி காலத்தில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியாமல் இருந்திருக்கலாம். அதனை கேட்டு தற்போது செயல்படுத்த முடியும். இதில் எந்த பிரச்சினையும் இல்லை. பசவராஜ் பொம்மை பெங்களூரு பொறுப்பையும் நிர்வகித்து இருந்தார். அரசியல் என்பது வேறு, தலைவர்களுடனான நட்பு வேறு. குமாரசாமியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அவ்வாறு வாய்ப்பு கிடைத்தால் சந்தித்து பேசுவேன். எம்.எல்.ஏ.க்களுக்கான பயிற்சியில் தார்மீக குருக்கள் பேச இருப்பது சபாநாயகர் எடுத்திருக்கும் முடிவு. சபாநாயகர் எடுக்கும் முடிவில் அரசு தலையிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.