தொடர் கனமழையால் கரைபுரளும் ஆறுகள் – அசாமில் 4.89 லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிப்பு!!
அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பிரம்மபுத்ரா நதியில் ஜோர்ஹட் மற்றும் துப்ரி மாவட்டங்களில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்கிறது.
இதுபோல மனாஸ், பக்லாதியா மற்றும் புதிமாரி ஆகிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதுகுறித்து அசாம் மாநில பேரிடர் நிர்வாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அசாம் மாநிலத்தில் பஜாலி, பார்பெட்டா, பிஸ்வநாத், பொங்கைகான், சிராங், துப்ரி, திப்ரூகர் உட்பட 19 மாவட்டங்களில் கடும்வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 4.89 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 10,782.8 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள பயிர்கள் நீரில்மூழ்கி உள்ளன. 4.27 லட்சம் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.