மோசடி வழக்கில் மாநில தலைவர் கைது எதிரொலி- கேரளாவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!!
கேரள மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் சுதாகரன். இவர் போலி புராதனப்பொருட்கள் விற்பனை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட மோன் சன் மாவுங்கல் என்பவருடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்ட சுதாகரனை போலீசார் திடீரென கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். சுதாகரன் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். மேலும் ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருவனந்தபுரம் தலைமை செயலகம் உள்பட பல்வேறு இடங்களில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவங்கள் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.