எகிப்தில் பிரதமர் மோதி சென்ற ‘அல்-ஹகிம்’ மசூதிக்கு இந்தியாவுடன் இப்படி ஒரு தொடர்பா? !!
அமெரிக்க பயணத்தை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோதி இரண்டு நாள் பயணமாக எகிப்து சென்றுள்ளார். தனது பயணத்தின் முதல் நாளான நேற்று அவர் எகிப்தின் அதிபர் அப்துல் ஃபதேஹ் அல்-ஸிஸியை சந்தித்துப்பேசினார். பல முக்கிய விஷயங்கள் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டன.
பயணத்தின் இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோதி கெய்ரோவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க அல்-ஹகிம் மசூதிக்குச்சென்றார்.
எகிப்தில் உள்ள அல்-ஹகிம் மசூதி 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்தியாவின் தாவூதி போஹ்ரா சமூகத்தின் உதவியால் இது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் மூன்று மாதத்திற்கு முன் முடிவடைந்தது.
மசூதியை அடைந்த பிரதமர் சுவர்கள் மற்றும் கதவுகளில் உள்ள கலைப் படைப்புகளை பார்வையிட்டார். அங்கு இருந்தவர்களிடம் பிரதமர் உரையாடினார்.
1979 ஆம் ஆண்டு யுனெஸ்கோ இந்த மசூதியை உலக மரபுச்சின்னமாக அறிவித்தது.
இதுதவிர, ‘ஹீலியோபோலிஸ் காமன்வெல்த் போர் கல்லறை’க்கும் மோதி சென்றார். முதலாம் உலகப் போரின் போது எகிப்து நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் மோதியின் முதல் எகிப்து பயணம் இதுவாகும். 1997க்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் எகிப்துக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை.
எகிப்தின் தலைநகரான கெய்ரோ, இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு உலகளவில் பிரபலமானது.
இஸ்லாம் தொடர்பான கட்டிடங்களும் பல்வேறு காலகட்டத்தைச்சேர்ந்த மசூதிகளும் இங்கு உள்ளன. இந்த மசூதிகளில் ஒன்று அல்-ஹகிம் மசூதி.
பேராசிரியர் டோரிஸ் பெஹ்ரென்ஸ் அபுசைஃப் தனது ‘ இஸ்லாமிக் ஆர்கிடெக்சர் இன் கெய்ரோ : அன் இன்ட்ரொடக்ஷன்’ என்ற புத்தகத்தில் அல்-ஹகிம் மசூதியைப் பற்றிய தகவல்களை அளித்துள்ளார். அல்-ஹகிம் மசூதி கட்டப்பட்ட சூழ்நிலை அசாதாரணமானது என்று அவர் எழுதுகிறார்.
ஃபாத்திமி கிலாஃபத்தின் ஐந்தாவது கலீஃபா அல்-அஜிஸால் பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் (கி.பி. 990) மசூதியின் கட்டுமானம் தொடங்கப்பட்டது.
ஃபாத்திமி கிலாஃபத் அரபு வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர் தன்னை, முகமது நபியின் மகள் ஃபாத்திமா மற்றும் அவரது கணவர் அலியுடன் தொடர்புடையவர் என்று கருதுகிறார். அலி முதலாவது ஷியா இமாம் ஆவார்.
கட்டுமானம் தொடங்கி ஒரு வருடம் கழித்து முதல் தொழுகை மசூதியில் நடந்தது. ஆயினும் அப்போது கட்டிடம் முழுமையாக கட்டப்பட்டிருக்கவில்லை.
அதுவரை மசூதியில் தொழுகை அறை மட்டுமே கட்டப்பட்டிருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
”முழுமையாக கட்டி முடிக்கப்படாத இந்த மசூதியில் சுமார் 12 ஆண்டுகள் தொடர்ந்து தொழுகை நடைபெற்றது. 1002-03 ஆம் ஆண்டில் அல்-அஜிஸின் மகனும், பாத்திமி கிலாஃபத்தின் ஆறாவது கலீஃபாவுமான அல் ஹகிம், மசூதியின் புனரமைப்புப் பணியைத் தொடங்கினார்,” என்று அமெரிக்க வரலாற்றாசிரியர் ஜொனாதன் எம். ப்ளூம், ’தி மாஸ்க் ஆஃப் அல் ஹகிம் இன் கெய்ரோ’ என்ற தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதே அல்-ஹகிமின் பெயரால் இந்த மசூதி அறியப்படுகிறது.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு 1013 ஆம் ஆண்டில் மசூதி முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது.
அப்போது மசூதியின் நீளம் 120 மீட்டராகவும் அகலம் 113 மீட்டராகவும் இருந்தது.
இது புகழ்பெற்ற அல்-அஸ்ஹர் மசூதியை விட இரண்டு மடங்கு பெரியது. இதன் கட்டுமானத்திற்கான மொத்த செலவு 45 ஆயிரம் தினார் ஆகும்.
அப்போது மசூதி கெய்ரோ நகரத்தின் சுவர்களுக்கு வெளியே இருந்தது. ஆனால் 1087 ஆம் ஆண்டில் மசூதி நகருக்குள் சென்றடைந்தது.
இந்தப்பணியை பாத்திமித் கிலாஃபத்தின் எட்டாவது கலீஃபா அல்-முஸ்தான்சீரின் அமைச்சரான பத்ர் அல்-ஜமாலி செய்தார்.
பத்ர் அல்-ஜமாலி கெய்ரோ நகரத்தின் வடக்கு சுவரை மசூதி வரை விரிவுபடுத்தினார்.
13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் எகிப்தில் மம்லுக் சுல்தானகத்தின் ஆட்சி நிறுவப்பட்டது.
1303 ஆம் ஆண்டில், எகிப்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக கிசா பிரமிடுகளுடன் கூடவே பல மசூதிகளும் சேதமடைந்தன.
சேதமடைந்த மசூதிகளில் அல்-ஹகிம் மசூதியும் ஒன்று.
இதற்குப் பிறகு, மம்லுக் சுல்தான் அபு-அல்-ஃபதஹ அதை சீர் செய்தார்.
அந்த நேரத்தில் மசூதி இஸ்லாமிய கல்விக்காகவும் பயன்படுத்தப்பட்டது.
பல நூற்றாண்டுகளாக மசூதியின் உட்புறம் தொடர்ந்து சேதமடைந்து வந்தது. எப்போதாவதுமட்டுமே ஒரு மசூதியாக அது பயன்படுத்தப்பட்டது.
எழுத்தாளர் கரோலின் வில்லியம்ஸ்,’ இஸ்லாமிக் மான்யூமெண்ட்ஸ் இன் கெய்ரோ: எ ப்ராக்டிகல் கைட்’ என்ற தனது புத்தகத்தில், ”மசூதி வளாகம் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமாக பயன்படுத்தப்பட்டது,” என்று கூறுகிறார்.
இந்த மசூதி கிறிஸ்தவ புனிதப் போரின் போது சிறைச்சாலையாகவும், அய்யூபி பேரரசின் சலாவுதீன் காலத்தில் குதிரை தொழுவமாகவும், நெப்போலியனால் கோட்டையாகவும், 1890 யில் இஸ்லாமிய கலை அருங்காட்சியகமாகவும் பின்னர் 20 ஆம் நூற்றாண்டில் ஆண்களுக்கான பள்ளியாகவும் பயன்படுத்தப்பட்டது.
தாவூதி போஹ்ரா சமூகத்தின் தலைவரான சையத்னா முஃதால் சைஃபுதீனுடன் பிரதமர் நரேந்திர மோதி.
மசூதிக்கு தாவூதி போஹ்ரா சமூகம் ஆதரவு
1970 களின் பிற்பகுதியில் மசூதியின் புனரமைப்பு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
இந்த கட்டுமானப் பணியின் பொறுப்பை தாவூதி போஹ்ரா சமூகத்தின் 52 வது சமயத் தலைவர் முகமது புர்ஹானுதீன் ஏற்றுக்கொண்டார்.
முகமது புர்ஹானுதீன் இந்தியாவுடன் தொடர்புடையவர் மற்றும் சமூகத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசு அவருக்கு மரணத்திற்குப் பின் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.
அல்-ஹகிம் மசூதியின் புனரமைப்பில் வெள்ளை பளிங்கு மற்றும் தங்க அலங்காரங்கள் பயன்படுத்தப்பட்டன. புனரமைப்பு பணிகளுக்கு 27 மாதங்கள் ஆனது.
இதற்குப் பிறகு மசூதி 1980 நவம்பர் 24 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது.
மசூதியின் திறப்பிற்காக பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழாவில் அப்போதைய எகிப்து அதிபர் அன்வர் சதாத், மதத்தலைவர் முகமது புர்ஹானுதீன், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்துடன் தொடர்புடைய சமயவாதிகள் கலந்து கொண்டனர்.
ஏறக்குறைய நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு 2017 ஆம் ஆண்டில் தாவூதி போஹ்ரா சமூகமும், எகிப்தின் சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகமும், மசூதி தொடர்பான ஒரு கூட்டு முன்முயற்சியைத் தொடங்கின.
இதன் கீழ் மசூதியின் கட்டிடங்களை புனரமைப்பதுடன், மசூதியின் சுவர்களை ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க பணிகள் துவக்கப்பட்டன. சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் திட்டமிடப்பட்டன.
2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2023ஆம் ஆண்டு வரை நீடித்தது. ஆறு ஆண்டுகளில் 20 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டது.
எகிப்தின் நான்காவது பழமையான மற்றும் இரண்டாவது பெரிய மசூதியான அல்-ஹகிம் மசூதி இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டது.
அல்-ஹகிம் மசூதிக்கு பிரதமர் மோதி சென்றது மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள, தாவூதி போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் பிபிசி பேசியது.
இது தாவூதி போஹ்ரா சமூகத்தினருடன் கூடவே இந்தியா முழுமைக்கும் பெருமை சேர்க்கும் தருணம் என்று மும்பையில் உள்ள கல்லூரி ஒன்றில் கற்பிக்கும் டாக்டர் தாலிப் யூசுஃப் கூறினார்.
“தாவூதி போஹ்ராக்கள் இந்தியாவில் ஒரு சிறிய சமூகம். பிரதமர் மோதி அல்-ஹகிம் மசூதிக்குச்செல்வது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தச்செயலானது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் செய்தியை உலகிற்கு அனுப்பும்,” என்றார் அவர்.
“எகிப்தின் வரலாற்று சிறப்புமிக்க அல்-ஹகிம் மசூதி உலகெங்கிலும் குடியேறியுள்ள தாவூதி போஹ்ரா சமூகத்தினருக்கு சிறப்பு வாய்ந்ததாகும். இஸ்லாமிய மதத்தை பின்பற்றும் எல்லா சமுதாய மக்களும் இங்கு சென்று தொழுகை நடத்துகின்றனர்,” என்று அல்-ஹகிம் மசூதி குறித்து டாக்டர் தாலிப் கூறினார்.
பிரதமர் மோதியைப் பற்றி பிபிசியிடம் பேசிய தாவூதி போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு நபர், குஜராத் முதல்வராக இருந்ததில் இருந்தே போஹ்ரா சமூகத்தின் மீது பிரதமர் மோதிக்கு பற்றுதல் இருக்கிறது என்று கூறினார்.
“பிரதமர் மோதி வெளிநாட்டுப் பயணத்திற்குச் செல்லும்போது அங்கே தாவூதி போஹ்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்களை அவர் பார்த்தால், மிகுந்த உள்ளன்புடன் அவர்களை சந்தித்து உரையாடுவார். பிரதமர் குஜராத்தைச் சேர்ந்தவர். குஜராத்தில் தாவூதி போஹ்ராக்களின் கணிசமான எண்ணிக்கை உள்ளது. எனவே பரஸ்பர அன்பு காணப்படுகிறது ,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அல்-ஹகிம் மசூதி, கெய்ரோவில் உள்ள ஃபாத்திமி கட்டிடக்கலை மற்றும் வரலாற்றின் தனித்துவமான எடுத்துக்காட்டு.
இந்த செவ்வக வடிவ மசூதி 13 ஆயிரத்து 560 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. அதன் நடுவில் ஐந்தாயிரம் சதுர மீட்டர் பெரிய முற்றம் உள்ளது.
முற்றத்தைச் சுற்றிலும் பெரிய மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன.
மசூதியின் இரு முனைகளிலும் கட்டப்பட்டுள்ள மினார்கள் (கோபுரம்), மசூதியின் சிறப்பம்சமாகும். இது மசூதியின் ஆரம்ப நாட்களில் கட்டப்பட்டது.
இரண்டு மினார்களின் வடிவமைப்பும் மிகவும் அசலானது. இது அந்த நேரத்தில் உலகின் பிற பகுதிகளில் இருந்த மினார்களிலிருந்து வேறுபட்டது.
இந்த மினார்களின் வெளிப்புற பகுதி மற்றும் அடிப்பகுதி மம்லுக் பாணியில் அமைந்துள்ளது, உள் மையமானது ஃபாத்திமி பாணியில் செய்யப்பட்டுள்ளது.
மசூதியின் முக்கிய பகுதி மற்றும் மினார்கள் கல்லால் ஆனவை. மீதமுள்ள அமைப்பில் செங்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் மொத்தம் பதின்மூன்று கதவுகள் உள்ளன. முற்றத்தின் நடுவில் நீர் ஆதாரம் உள்ளது.
வெளிநாடுகளில் உள்ள மசூதிகளுக்கு சென்ற மோதி
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் மத்தியில் பிரதமர் மோதி மசூதிக்கு செல்வது இது முதல் முறையல்ல.
தனது முந்தைய சுற்றுப்பயணங்களின்போதும் மோதி மசூதிகளுக்குச்சென்றுள்ளார்.
ஷேக் சாயத் மசூதி: 2015 ஆகஸ்டில் மோதி இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றார்.
இந்த பயணத்தின் முதல் நாளில் வரலாற்று சிறப்புமிக்க ஷேக் சாயத் மசூதிக்கு மோதி சென்றார்.
அப்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் உயர்கல்வி அமைச்சர் ஷேக் ஹம்தான் பின் முபாரக் அல் நஹ்யானும் மோதியுடன் இருந்தார்.
சுல்தான் கபூஸ் மசூதி: 2018 பிப்ரவரியில் மோதி மேற்கு ஆசியாவில் ஜோர்டன், பாலஸ்தீனம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.
இதன்போது, ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள சுல்தான் கபூஸ் மசூதிக்கு மோதி சென்றார்.
இந்திய மணற்பாறைகளால் கட்டப்பட்ட ஓமனின் மிகப்பெரிய மசூதி இதுவாகும்.
சூலியா மசூதி: 2018 மே-ஜூன் மாதத்தில் பிரதமர் மோதி மூன்று நாடுகளுக்குச் சென்றார்.
இந்த நாடுகள் – இந்தோனேஷியா, மலேஷியா மற்றும் சிங்கப்பூர். சிங்கப்பூர் பயணத்தின் போது முதலில் ஸ்ரீ மாரியம்மன் கோயிலுக்குச் சென்ற மோதி பின்னர் சூலியா மசூதியை அடைந்தார்.
இந்த மசூதி தமிழ் முஸ்லிம்களின் சமூகமான சூலியா முஸ்லிம் சமூகத்தால் கட்டப்பட்டது.
இஸ்திக்லால் மசூதி: இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் அமைந்துள்ள இந்த மசூதி உலகின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாகும்.
2018 மே மாதம் பிரதமர் நரேந்திர மோதி இந்த மசூதிக்குச்சென்றார். அப்போதைய இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோவும் அவருடன் சென்றிருந்தார்.