டைட்டானிக் கப்பலை பார்க்க ஆழ்கடலுக்கு சென்றபோது 5 உயிர்களை பறித்த ‘டைட்டன்’ நீர்மூழ்கியில் ஏகப்பட்ட குறைகள்!!
ஒரு வாரத்துக்கு முன்பு, வடக்கு அட்லான்டிக் பெருங்கடலின் ஆழத்தில் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்தது. டைட்டன் என்று பெயரிடப்பட்ட ஆழ்கடல் நீர்மூழ்கி சுற்றுலா வாகனம், 5 நபர்களைக் கொண்ட குழுவை ஏற்றிச் சென்றது. டைட்டன், நூற்றாண்டு பழமையான டைட்டானிக் கப்பலின் இடிபாடுகளுக்கு அருகில் சென்ற பொழுது பேரழிவை சந்தித்தது.
கனடா மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த கடலோர கண்காணிப்பை மேற்கொள்ளும் கடற்படையின் கப்பல்களில் இருந்து, கடலுக்கு அடியில் தொலைவில் இருந்து இயக்கக் கூடிய வாகனத்தைக் கொண்டு தேடுதல் மற்றும் மீட்பு பணி மேற்கொண்டனர்.
தேடுதல் பணியின் இறுதியில் அமெரிக்காவைச் சேர்ந்த கடலோர காவல் படை உயர் அதிகாரி, டைட்டன் பேரழுத்தத்தின் காரணமாக சிதைந்திருக்கலாம். இதில் 5 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அறிவித்தார்.
நீர்மூழ்கி கப்பல் (Submarine) கடற்படையால் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஆராய்ச்சி, பொழுதுபோக்கு நோக்கத்துக்காக நீரில் மூழ்கக் கூடிய வாகனம் (Submersible) பயன்படுத்தப்படுகிறது. நவீன தொழில்நுட்பம் கொண்ட ஆராய்ச்சி மனிதர்களை ஏற்றிச் செல்லும் நீர்மூழ்கி வாகனம், அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சொந்தமானவை, மேலும் இந்தியா ஆராய்ச்சி நீர்மூழ்கி வாகனத்தை (Samudrayan) உருவாக்கி வருகிறது. இந்த நீர்மூழ்கி வாகனங்கள் டைட்டானியம் அலாய் மூலம் தயாரிக்கப்பட்டது
இந்த டைட்டன் அமெரிக்க நிறுவனமான ‘OceanGate’ நிறுவனத்துக்கு சொந்தமானது. டைட்டன் முதன்மையான இலகுரக கார்பன் ஃபைபரால் வடிவமைக்கப்பட்டது இது ஒரு சிறிய பஸ் போன்றதாகும். 22 அடி நீளமும் 9 அடி அகலமும் 8 அடி உயரமும் ஒரு கழிவறையும் மற்றும் வெளியில் நடக்கக் கூடியதை பார்க்கக் கூடிய கண்ணாடியால் செய்யப்பட்ட ஜன்னலையும் தரையில் அமரக் கூடிய இருக்கைகளையும் 96 மணி நேரம் பயணிக்க கூடிய வகையில் ஆக்சிஜன் சப்ளையையும் கொண்டது. இதில் பயணம் செய்ய ஒரு பயணிக்கு 2,50,000 டாலர் (2 கோடி ரூபாய்) செலவாகும்.
ஆனால், சர்வதேச வகைப்படுத்துதல் சங்கத்தில் உறுப்பினராக உள்ள எந்த ஒரு கடல்சார் அமைப்பிலும் இந்த டைட்டன் நீர்மூழ்கி வாகனத்துக்கு எந்த சான்றிதழும் பெறப்படவில்லை. டைட்டனின் வடிவமைப்பு குறித்து முன்னாள் ஊழியர்கள் கவலை தெரிவித்தனர். டைட்டானிக் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், ஆழ்கடலில் பல முறை பயணம் செய்திருந்தாலும் டைட்டனின் வடிவமைப்பு குறித்து தனது கவலையை தெரிவித்திருந்தார்.
நீங்கள் ஆழமாக செல்ல செல்ல நீருக்கடியில் அழுத்தம் அதிகரிக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் பாகங்கள் வடக்கு அட்லான்டிக் கடலின் அடிப்பகுதியில் சுமார் 4,000 மீட்டர் ஆழத்தில் உள்ளது. அங்கு அழுத்தம் 400 (bar) பார் ஆகும். அது நாம் சுவாசிப்பதை விட 400 மடங்கு அதிகம். மனித உடல் ஹைட்ரோஸ்டேடிக் அழுத்தம் அதிகரிப்பதைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. பொழுது போக்குக்காக ஆழ்கடலில் செல்வதற்கு பாதுகாப்பான வரம்பு 40 மீட்டர் மட்டுமே.
எனினும் 2 கடல் விலங்குகள், ஸ்பெர்ம் திமிங்கலம் மற்றும் பாட்டில் மூக்கு திமிங்கலம். வழக்கமாக கடல் மேற்பரப்பில் இருந்து அதிக ஆழம் வரை பயணம் செய்வதற்கு ஏற்றவாறு பொருத்தமான அம்சங்களை கொண்டுள்ளன.
டைட்டனின் தோல்விக்கான காரணம்,பொருள் தேர்வு, கட்டுமானம், ஆய்வு, பாதுகாப்பு மற்றும் சான்றிதழை புறக்கணித்தல். கார்பன் ஃபைபர் கலவையானது டைட்டானியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் வெளிப்படையாகக் காண முடியாத குறைபாடு மற்றும் உயர் அழுத்தம் போன்றவற்றால் தோல்வியை சந்தித்திருக்கலாம். அதனால் சாகசம் என்ற பெயரில் 5 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.
திருக்குறளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பராமரிப்பு பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது.
“வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்”