பெண்கள் தலைமையில் 1,200 பேர் சுற்றிவளைத்ததால் மணிப்பூரில் கைது செய்த 12 பேரை விடுவித்தது ராணுவம்!!
மணிப்பூரில் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட 12 பேரை விடுவிக்க கோரி பெண்கள், குழந்தைகள் உட்பட 1,200-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் உயிரிழப்புகளை தவிர்க்க அவர்களை ராணுவம் விடுவித்துள்ளது.
மணிப்பூரில் மைதேயி இனத்தவருக்கும் குகி பழங்குடி இனத்தவருக்கும் இடையே அரசு சலுகைகள், இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே 3-ம் தேதி கடும் மோதல் ஏற்பட்டது. வீடுகள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. வன்முறை நிகழ்வுகள் இன்னும் தொடர்ந்தபடி உள்ளன.
இதுவரையில் இந்த வன்முறையில் 100-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த ராணுவம் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதில் கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தியதில் ராணுவ வீரர்களும் காயம் அடைந்துள்ளனர். மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நேரடியாக மணிப்பூர் சென்று அமைதி முயற்சி மேற்கொண்டார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம், மைதேயி இனத்தைச் சேர்ந்தகங்லி யாவோல் கண்ண லுப் போராட்டக் குழுவினர் பல்வேறு இடங்களில் கலவரத்தில் ஈடுபட்ட நிலையில், அக்குழுவைச் சேர்ந்த 12 பேரை ராணுவம் கைது செய்தது.
இந்தக் குழு மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் மணிப்பூரில் ராணுவத்தினர் மீது இக்குழு பெரும் தாக்குதல் நடத்தியது. அதில் 18 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனால், இக்குழுவை இந்திய ராணுவம் தொடர்ச்சியாக கண்காணித்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் கலவரத்தில் ஈடுபட்ட அக்குழுவினரை ராணுவம் கைது செய்தது.
இதையடுத்து அவர்களை விடுவிக்ககோரி, ராணுவத்தினரை மைதேயி இனத்தினர் சூழ்ந்தனர். இதாம் கிராம பெண்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த முற்றுகையில் 1,200 பேர் பங்கேற்றனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர்.
பெண்கள் தலைமையில் முற்றுகையிடப்பட்டதால், அவர்களைக் கலைக்க ராணுவத்தால் பலப்பிரயோகம் செய்ய முடியவில்லை. இதனால், கைது செய்த 12 பேரையும் ராணுவம் விடுவித்தது.
இது குறித்து இந்திய ராணுவம் கூறுகையில், “பெண்கள் தலைமையில் பெரும் கூட்டம் ராணுவத்தினரை சூழ்ந்தது. கூட்டத்தைக் கலைக்க பலப்பிரயோகம் நடத்தினால், உயிரிழப்பு நிகழக்கூடும். இதைக் கருத்தில் கொண்டு அவர்களது கோரிக்கையின்படி, கைது செய்யப்பட்ட 12 பேரும் விடுவிக்கப்பட்டனர். பொறுப்பில் இருந்த ராணுவ கமாண்டரின் முதிர்ச்சியான இந்த முடிவு இந்தியா ராணுவத்தின் மனிதாபிமான முகத்தைக் காட்டுகிறது” என்று தெரிவித்தது.