மூன்றில் இரண்டு பங்கு ரூ.2,000 நோட்டுகள் வாபஸ்: ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்!!
ரிசர்வ் வங்கி கடந்த மே 19-ம் தேதி ரூ.3.62 லட்சம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக திடீரென அறிவித்தது. சுத்தமான நோட்டு கொள்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
ஜூன் 8-ம் தேதியன்று, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது நிதிக் கொள்கை மதிப்பாய்வு அறிக்கையில், மார்ச் 31-ம் தேதி வரை புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் சுமார் 50 சதவீதம் மதிப்புள்ள (ரூ.1.8 லட்சம் கோடி) நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்துவிட்டதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியிருந்தார்.
கடந்த வாரம், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது:
மார்ச் 31 கணக்கீட்டின்படி ரூ.3.62 லட்சம் கோடி மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இந்த நிலையில், கரன்சிகளை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்துக்குள் மூன்றில் இரண்டு பங்கு 2,000 நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டு விட்டன. அதாவது ஒட்டுமொத்தமாக புழக்கத்தில் இருந்த 2,000 நோட்டுகளில் ரூ.2.41 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவந்து விட்டன. இதில், 85 சதவீதம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை ஏனைய கரன்சிகளாக மாற்றிக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள செப்டம்பர் 30, 2023 வரை ரிசர்வ் வங்கி காலக்கெடு வழங்கியுள்ளது குறிப் பிடத்தக்கது.