பல நாள் பேஸ்புக் காதலன் சிக்கினார்!!
பல இளம் பெண்களை ஏமாற்றி அவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வைத்து மிரட்டி பணம் பறித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த விசாரணையையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகநூல் ஊடாக இளம் பெண்களை அடையாளம் கண்டுகொண்ட சந்தேக நபர் அவர்களைக் காதலிப்பது போல் பேசி பழகியுள்ளார். பின்னர், அப்பெண்களை விடுதிகளுக்கு அழைத்துச் சென்று நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை காண்பித்து சம்பந்தப்பட்ட இளம் பெண்களை மிரட்டி, தாம் கேட்ட பணத்தை தராவிட்டால் அந்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வெளியிடுவதாக தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, அவிசாவளை பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவருடன் காதல் உறவை வளர்த்துக் கொண்ட குறித்த சந்தேக நபர், வழக்கம் போல்அந்த யுவதியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் எடுத்துள்ளார்.
பின்னா் அவரை மிரட்டி சுமார் 2 லட்சம் ரூபாயை பறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தன்னிடம் பலமுறை பணம் கேட்டு மிரட்டியதால், இது தொடர்பாக பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவில் அந்த யுவதி முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்கமைய சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவா் என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட போது அவரின் நவீன கையடக்கத் தொலைபேசியை சோதனை செய்ததில் அவர் பல இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை வைத்திருந்தமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.