முடிந்தது முடிந்தது தான்.. செந்தில் பாலாஜி மனைவி தரப்பு தடாலடி வாதம்: தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்!!
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் இருக்கும் அவருக்கு காவேரி மருத்துவமனையில் இருதய ஆபரேசன் செய்யப்பட்டது. இப்போது பலத்த பாதுகாப்புடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீதான கைது நடவடிக்கை சட்ட விரோதமானது என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பில் வக்கீல் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதாடினார். அவர் தனது வாதத்தில் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது நிரூபணமாகி உள்ளது என்றார். அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். அப்போது செந்தில் பாலாஜி சட்ட விரோத காவலில் இல்லை என்றும், நீதிமன்ற காவலில் தான் இருக்கிறார் எங்னறும் கூறினார். ‘அமலாக்கத்துறை காவலில் இல்லை. செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தி விடுவிக்கும்படி தற்போது கோர முடியாது. போக்குவரத்து துறை பணி முறைகேடு தொடர்பாகவே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலை வாங்கி தருவதற்கு அவர் பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் உள்ளன. அந்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்’ என்றும் அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது. “செந்தில்பாலாஜி மருத்துவமனையில் இருப்பதால் அவரிடம் விசாரிக்க நிபந்தனைகளை விதித்து அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மருத்துவர்களின் அனுமதி பெற்றுதான் விசாரிக்க முடியும் என்கிற நிபந்தனையால், விசாரணை நடத்த முடியவில்லை” என்றும் துஷார் மேத்தா கூறினார். மேகலா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதாடினார். அப்போது, ஆட்கொணர்வு மனு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய முடியாது என்றும், உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் தெரிவித்தார். “மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருதக்கூடாது என்று அமலாக்கத்துறை கோர முடியாது.
அதற்கு எந்த சட்டத்திலும் வழிவகை செய்யப்படவில்லை. 15 நாட்கள் முடிந்தது முடிந்ததுதான். கைது செய்யப்பட்ட 15 நாட்களுக்குள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கலாம். கொரோனாவாக இருந்தாலும் சரி, பூகம்பமாக இருந்தாலும் சரி, 15 நாட்களுக்கு மேல் காவலில் வைத்து விசாரிக்க கோர முடியாது. கைது செய்யப்பட்டு 15 நாட்கள் முடிந்தபின் செந்தில் பாலாஜியை விசாரிப்பதில் அமலாக்கத்துறை வெளிப்படுத்திய சிரமங்களை கருத்தில் கொள்ள முடியாது. 15 நாட்கள் முடிந்துவிட்டால் உலகம் முடிவுக்கு வந்துவிடாது” என்றும் மேகலா தரப்பில் வாதிடப்பட்டது. ஆட்கொணர்வு வழக்கில் சுமார் 8 மணி நேரம் நடந்த விசாரணை இன்று மாலையில் நிறைவடைந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்வதற்கு இரு தரப்புக்கும் நாளை வரை அவகாசம் அளித்தனர்.