படையினர் மத்தியில் புடின் – ரஷ்யாவில் அஸ்தமிக்கும் வாக்னர் படை !!
ரஷ்யாவில் அதன் தனியார் இராணுவமான வாக்னர் வாடகை குழுவின் தலைவர் ஜெவனி பிரிகோசினஜன் கிளர்ச்சியால் அதிபர் விளாடிமிர் புடினின் அதிகார தளத்தில் ஒரு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ஊகங்கள் வெளிவந்த நிலையில், இன்று அவர் படையினர் மத்தியில் உரையாற்றி தனக்கு இன்னமும் படைத்தரப்பின் ஆதரவு உள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
இன்று வழங்கப்பட்ட இந்த உரையில் கிளர்ச்சி செய்த வாக்னர் தனியார் இராணுவ பிரிவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோசினுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான விரிவான தகவல்களை அவர் வழங்கவில்லை.
ரஷ்யாவில் கடந்த சனியன்று பரபரப்பை தோற்றுவித்த வாக்னர் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை கைவிட ரஷ்யாவின் கூட்டாட்சி பாதுகாப்பு சேவை முடிவெடுத்த நிலையில், இன்று படையினர் மத்தியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உரையாற்றியிருந்தார்.
கடந்த சனிக்கிழமையன்று தலைநகர் மொஸ்கோவை நோக்கி வாக்னரின் துருப்புகள் முன்னேறியபோது பொதுமக்கள் எவருக்கும் உயிரிழப்பு இல்லை என்று கூறிய அவர், விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டதில் இரண்டு விமானிகள் பலியானதாகவும் கூறினார்.
குடிமக்களின் வாழ்க்கை, அவர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக தொடர்ந்து அர்ப்பணிப்பை வழங்கும் படைப் பிரிவுகளைப் பாராட்டிய அவர், அவர்களின் இராணுவ கடமைக்கு நன்றியும் தெரிவித்தார்.
எதிர்வரும் 30 ஆம் திகதியன்று வாக்னர் படையினர் தம்மிடமுள்ள கனரக இராணுவ உபகரணங்களையும் ரஷ்ய இராணுவத்திடம் ஒப்படைக்கவுள்ள நிலையில் புடினின் இந்த உரை வந்துள்ளது.
இந்த ஆயுத ஒப்படைப்பு நகர்வை நேற்று வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோசினும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் இதுவரை யெவ்ஜெனி பிரிகோசினுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பான விரிவான தகவல்களை ரஷ்ய அரசாங்கம் வழங்கவில்லை. அத்துடன் அவரது இருப்பிடம் தமக்கு தெரியாது எனவும் அது கூறுகிறது.
இதற்கிடையே நேற்று முப்படை தளபதிகள் மற்றும் உளவுத்துறை தலைகள் உட்பட்ட உயர்மட்டத்துடன் புடின் ஒரு சந்திப்பை நடத்தியிருந்தார். ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஷோய்குவும் இதில் பங்கெடுத்திருந்தார்.
இந்தச் சந்திப்பின் பின்னர் வாக்னர் குழுவில் உள்ள துருப்புகள் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணையவேண்டும் அல்லது தமது குடும்பங்களுக்கு அல்லது பெலாரஸுக்குச் செல்லலாம் என்று புடின் அறிவித்தார்.
அத்துடன் சரியான முடிவை எடுத்து சகோதர இரத்தக் களரியை ஏற்படுத்தாமல் கிளர்ச்சியை நிறுத்திய வாக்னர் துருப்புகளுக்கும் தளபதிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
எனினும் இந்த ஆயுதக் கிளர்ச்சி தொடர்ந்திருந்தால் ஒடுக்கப்பட்டிருக்கும் என்ற விடயத்தையும் அவர் கூற மறக்கவில்லை.
இந்த நிலையில் ரஷ்யாவில் நடந்த நிகழ்வுகளுடன் இந்தக் கிளர்ச்சியில் அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் எந்த பங்கும் இல்லையென அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.