;
Athirady Tamil News

மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

0

மாங்காட்டில் உள்ள வெள்ளீஸ்வரர் கோவில் சிறந்த “சுக்கிரன்” பரிகார தலமாக உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பிரம்மோற்சவ விழா கடந்த 23-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுவாமி மாடவீதி உலா, பஞ்சமூர்த்தி புறப்பாடு, ஆனித் திருமஞ்சனம், ஸ்ரீநடராஜர் அபிஷேகம் என தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் 7-ம் நாளான இன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு பால், பன்னீர், சந்தனம் கொண்டு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து ஆராதனையும் நடைபெற்றது. பின்னர் காலை 9 மணிக்கு கடக லக்னத்தில் சந்திர சேகர சோமாஸ்கந்தர் சமேத விநாயகர், முருகன், பெருமாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களோடு பஞ்சமூர்த்தி திருத்தேர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாங்காடு, பூந்தமல்லி, குன்றத்தூர் மட்டுமின்றி சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்து இருந்தனர்.

அவர்கள் “ஓம் நமச்சிவாய” என்ற பக்தி கோஷம் விண்ணை முட்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதி வழியாக வந்த தேர் பின்னர் கோவிலை வந்தடைந்தது. தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்ற பக்தர்கள் அனைவருக்கும், அப்பகுதி பொது மக்கள் மற்றும் வணிகர்கள் சார்பில் நீர், மோர், ரோஸ்மில்க் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.