பஸ் கட்டண திருத்தம் தேவையில்லை!!
இந்த வருடத்துக்கான வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தற்போதைக்கு அவசியமில்லை என ,இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன,இன்று (29) தெரிவித்தார்.
இந்த முடிவை தேசிய போக்குவரத்து சபைக்கு தாம் ஏற்கனவேஅறிவித்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பஸ் கட்டண சீர்திருத்தம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதலாம் திகதி நடைபெறும். பணவீக்கம், ஒரு லீற்றர் பெற்றோல் அல்லது டீசலின் விலை, பேரூந்து சக்கரம் உட்பட பிற பாகங்களின் பராமரிப்பு செலவு போன்றவை உள்ளடங்கலாக 12 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பஸ் கட்டணம் கணிக்கப்படும்.
”வருடாந்த கட்டண கணிப்பின் பின் 7 வீத உயர்வு உள்ளதாக தேசிய போக்குவரத்து சபை எமக்கு அறிவித்தது. தற்போதைய நிலைமையைப் பொறுத்த வரையில் 7 வீத உயர்வு என்பது ஏற்புடையதாக இருக்காது என ஒரு சங்கமாக நாங்கள் அவர்களுக்கு தெரிவித்தோம்” என அவர் தெரிவித்தார்.