;
Athirady Tamil News

மத்திய அமைச்சரவையில் மாற்றம் வருமா? பிரதமர் மோடி தலைமையில் 3ம் தேதி அமைச்சர்கள் கூட்டம்!!

0

அடுத்த வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், வரும் 3ம் தேதி (திங்கட்கிழமை), மத்திய அமைச்சர்கள் குழுவின் கூட்டம் நடைபெறவிருக்கிறது. மோடி ஆட்சியின் 9 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னர் நடைபெறவுள்ள இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் குழுவின் கடைசி கூட்டம், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாநாட்டு மையத்தில் இக்கூட்டம் நடைபெறும் என தெரிகிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில், செப்டம்பரில், இதே மாநாட்டு மையத்தில் ஜி20 (G20) உச்சிமாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

2024 மக்களவை தேர்தலுக்கான கட்சியின் செயல் திட்டங்கள் பற்றி விவாதிக்க பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் பிரதமர் மோடியின் இல்லத்தில் அவரை சந்தித்தனர். இக்கூட்டம் நடைபெற்ற மறுநாள் அமைச்சர்கள் குழு கூட்டம் குறித்த செய்தி வெளிவந்துள்ளது. நேற்றைய கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்ள ஒரு வழிகாட்டுதல் திட்டத்தை உருவாக்குவது பற்றியும் அக்கட்சி எதிர்கொள்ளும் சவால்களை நெறிப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அமித் ஷா, நட்டா மற்றும் பா.ஜ.க. பொதுச் செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷ் ஆகியோர் அமைப்பு மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து நீண்ட விவாதங்களை நடத்தினர். ஆனால், இந்த கூட்டம் குறித்து கட்சி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. எனினும், அரசாங்கத்திலும், கட்சி அமைப்பிலும் சில மாற்றங்கள் நிகழலாம் என்ற யூகங்களை இந்த ஆலோசனைக் கூட்டம் வலுப்பெற செய்துள்ளது.

சமீபத்தில் போபாலில் நடந்த பொதுக்கூட்டத்தின்போது பொது சிவில் சட்டம் (UCC) குறித்து ஆழமாக பேசிய பிரதமர் மோடியின் உரையின் பின்னணியில், 2024 தேர்தலுக்கு முன்னதாக பா.ஜ.க. அதன் முக்கிய சித்தாந்தக் கொள்கைகளை வலியுறுத்தும் என தெரிகிறது. ஜூலை 3வது வாரத்தில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பின்னணியில் திங்கட்கிழமை நடைபெறவுள்ள மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் அரசியல் ஆர்வலர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.