முறையாக அளவீடு செய்து தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்- பணி செய்யும் இடத்தில் பொதுமக்கள் முற்றுகை!!
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் 1500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன வல்லூர் கொண்டக்கரை குருவி மேடு கவுண்டர் பாளையம், வெள்ளி வாயல் சாவடி, உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வெளிவரும் மழைநீர் அத்திப்பட்டுபுதுநகர் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் அத்திப்பட்டு புது நகர் தாழ்வான பகுதி என்பதால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அங்குள்ள தாங்கல் நீர்நிலை இடத்தில் கன மழையால் வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் வல்லூர் தேசிய அனல் மின் நிலைய சமூக மேம்பாட்டு நிதி 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டனர். தடுப்பு சுவர் 50 அடி அகலத்திற்கு மட்டுமே 400 மீட்டர் தூரம் அமைக்கப்படுவதால், 100 அடி அகலத்திற்கு முழுவதுமாக தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக அளவீடு செய்து தடுப்புச் சுவரை அமைக்க வேண்டும், தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றும் கூறிய மக்கள், சாலை மறியல் செய்ய முயன்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்டிஜி கதிர்வேல் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து சார் ஆட்சியரிடம் மனு அளித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின்பேரில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். மேலும் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.