;
Athirady Tamil News

சர்வதேச பிரியாணி தினம்- நிமிடத்திற்கு 219 ஆர்டர்களை குவிக்கும் பிரியாணி பிரியர்கள்!!

0

அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் எத்தனையோ இருந்தாலும் அனைவரின் தேர்வாக இருப்பதில் கம… கம…, சுடச்சுட பிரியாணி தான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் ஆன்லைன் உணவு டெலிவரி முறை வந்த பின்னர் வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து சாப்பிடும் பிரியாணியின் மகத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், இந்தியர்கள் பிரியாணியை அதிகம் ஆர்டர் செய்துள்ளதாகவும், கடந்த 12 மாதங்களில் 7.6 கோடி ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளதாகவும் ஸ்விக்கி உணவு விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.

(2-ந்தேதி) சர்வதேச பிரியாணி தினத்தை கொண்டாடும் வகையில், ஆன்லைன் உணவு விநியோக தளமான ஸ்விக்கி, இந்தியர்கள் தங்கள் தளத்தில் பிரியாணியை ஆர்டர் செய்தது தொடர்பாக ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அந்த புள்ளி விவரப்படி தங்களுக்கு பிடித்தமான உணவு வகைகளில் பிரியாணி முதலிடத்தில் இருப்பதாகவும், பிரியாணியின் மீதான காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்றும் பிரியாணி பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்விக்கி நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள வாடிக்கையாளர்கள் பிரியாணியின் மகத்துவம் குறித்த கருத்துக்களை சமூக வலைதளங்களிலும் அதிக அளவில் பரப்பி வருகின்றனர். இது தொடர்பான புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம் கடந்த ஜனவரி 2023 முதல் ஜூன் 15 வரை செய்யப்பட்ட பிரியாணி ஆர்டர்கள் பற்றிய விபரத்தை வெளியிட்டுள்ளது. கடந்த ஐந்தரை மாதங்களில் பிரியாணி ஆர்டர்களில் 8.26 சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும், 2022 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் பிரியாணி ஆர்டர்கள் மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. பிளாட்பாரங்கள் மற்றும் சாலையோர கடைகள் மூலம் பிரியாணி வழங்கும் ஒரு லட்சம் உணவகங்கள், 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் இந்த பிரியாணி உணவில் தனித்துவம் பெற்றவையாக கண்டறியப்பட்டுள்ளன.

நறுமணமுள்ள லக்னோவி பிரியாணி முதல் காரமான ஐதராபாத் தம் பிரியாணி மற்றும் சுவையான கொல்கத்தா பிரியாணி முதல் மணமிக்க மலபார் பிரியாணி வரை, நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்களுக்கு பிரியாணி உணவுக்காக நிமிடத்திற்கு 219 ஆர்டர்களை வழங்குகின்றனர். பிரியாணி விற்பனையான உணவகங்கள் அதிகம் உள்ள நகரங்களைப் பொறுத்தவரை ஸ்விக்கியின் ஆய்வில், நாடு முழுவதும் உள்ள 26 லட்சத்துக்கும் அதிகமான உணவகங்கள் பிரியாணியை தயாரித்து வழங்குகின்றன. 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் பிரியாணி உணவை மட்டுமே தயாரித்து வழங்குவதில் தங்களது பெயரை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டி உள்ளது.

இருப்பினும், பெங்களூருவில் 24,000 பிரியாணி வழங்கும் உணவகங்களும், அதற்கு அடுத்தபடியாக மும்பையில் 22,000 உணவகங்களும், டெல்லியில் 20,000 உணவகங்களும் உள்ளன. பிரியாணி பிரியர்களின் எண்ணிக்கை என்று வரும்போது ஐதராபாத்தில் உள்ள ஸ்விக்கி நிறுவனம் 7.2 மில்லியன் ஆர்டர்களை அதிகம் பெற்று முதலிடத்தில் உள்ளது.

பெங்களூரு வாடிக்கையாளர்கள் 5 மில்லியன் ஆர்டர்களை செய்து தொடர்ந்து 2-வது இடத்திலும், அதற்கு அடுத்தபடியாக சென்னை வாசிகள் 3 மில்லியனுக்கும் அதிகமான ஆர்டர்களை பிரியாணிக்காக செய்து 3-வது இடத்தில் உள்ளனர். அதிலும் சுமார் 85 வகை பிரியாணி வகைகளுடன், 35 மில்லியன் ஆர்டர்களுடன் ஐதராபாத் பிரியாணி சாதனை படைத்துள்ளது. இதற்கிடையே சென்னையை சேர்ந்த பிரியாணி பிரியர் ஒருவர் ஒரே நேரத்தில் ஸ்விக்கி நிறுவனத்தில் ரூ.31 ஆயிரத்து 532-க்கு ஆர்டர் செய்து பிரியாணியின் மீதான பிரியத்தை உலகுக்கு வெளிக்காட்டி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.