வாக்னர் படையின் கோரமுகம் அம்பலம் -கொன்று மரத்தில் தொங்கவிடப்பட்ட உக்ரைன் படையினர் !!
உக்ரைனில் போர் கைதிகளாக சிக்கிய வீரர்களை வாக்னர் வாடகை படையினர் சித்திரவதை செய்து வீதியோர மரங்களில் கொன்று தொங்கவிட்டதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் படையில் தன்னார்வலர் மருத்துவ ஊழியராக செயல்பட்டவர் கனேடியரான பிராண்டன் மிட்செல் (Brandon Mitchell) இவரே தற்போது வாக்னர் வாடகை படையின் கோர முகத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
வாக்னர் படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்ய தலைமைக்கு எதிராக முன்னெடுத்த கிளர்ச்சி தோல்வியில் முடிந்த நிலையில், சர்வதேச ஊடக வெளிச்சம் பெற்றார். ஆனால், வாக்னர் வாடகை படையின் கோர முகத்தை தம்மால் மறக்க முடியாது என்கிறார் கனேடியரான பிராண்டன் மிட்செல்.
சர்வதேச சமூகம் தங்களால் இயன்ற உதவிகளை உக்ரைனில் ஆற்ற வேண்டும் என்ற அதிபர் ஜெலென்ஸ்கியின் கோரிக்கையை ஏற்று கனடாவில் இருந்து புறப்பட்டவர் பிராண்டன் மிட்செல்.
உண்மையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மூன்றாம் உலகப்போரின் ஆரம்பப் புள்ளி என்றே தாம் கருதுவதாக பிராண்டன் மிட்செல் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரத்துறையில் எவ்வித அனுபவமும் இல்லாத தான், உக்ரைன் இராணுவ மருத்துவமனையில் பணியாற்றும் நிலைக்கு முன்னேறியதை தம்மால் நம்ப முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் இராணுவத்தினருக்கு சிகிச்சை அளிக்கும் நிலையில், சிறைபிடிக்கப்பட்ட சில ரஷ்ய வீரர்களுக்கும் தாம் சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் பிராண்டன் மிட்செல் தெரிவித்துள்ளார்.
மேலும், வாக்னர் வாடகை படையினர் தீவிரமாக போரிட்ட பக்மூத் பகுதியில், உக்ரைனிய வீரர்கள் பலர் கொல்லப்பட்டு தெருவோர மரங்களில் தொங்கவிடப்பட்டிருந்ததை தாம் நேரில் பார்த்ததாக கூறும் பிராண்டன் மிட்செல், அந்த உடல்களில் வாக்னர் படையின் கோர முகத்தை காண நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.