எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவர் தினத்தில் டாக்டரை தாக்கிய 2 பேர் கைது!!
கேரள மாநிலம் எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிபவர் ஹரிஷ் முகமது. நேற்று இவர், வழக்கம்போல் பணியில் இருந்தார். அந்த மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரை பார்க்க ஜோஸ்னீல், ரோசன் ராபின் ஆகியோர் வந்தனர். பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவரை கேலி செய்துள்ளனர். மேலும் அவரிடம் தவறாக நடக்க முயன்று தொல்லை கொடுத்துள்ளனர். இதனை பணியில் இருந்த ஹரிஷ் பார்த்து, அவர்கள் இருவரையும் தட்டிக் கேட்டார். அதில் ஆத்திரம் அடைந்த இருவரும் டாக்டர் ஹரிசை சரமாரியாக தாக்கினர். அவர் மீது கொடூர தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடி விட்டனர். இந்த தாக்குதலில் டாக்டர் ஹரிஷ் காயம் அடைந்தார்.
அவர், அதே மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மருத்துவமனை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது டாக்டர் மீது தாக்குதல் நடத்திய இருவரில் ஒருவரது செல்போன் போலீசாரிடம் சிக்கியது. அதனை வைத்து டாக்டரை தாக்கிய இருவரையும் போலீசார் அடையாளம் கண்டனர். ஜோஸ்னீல், ரோசன் ராபின் ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்தனர். தேசிய மருத்துவர் தினமான நேற்று அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த பயிற்சி டாக்டர் தாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.