இன்னுமொரு மோசடிக்கு பாராளுமன்ற அனுமதி!!
அரசாங்கத்தின் இன்னொரு மோசடிக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் தொடர்பில் சட்டமா அதிபர் திறைசேரிக்கு முன்வைத்த பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கடன் மறுசீரமைப்பு தொடர்பான சகல அதிகாரங்களும் நிதி இராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளன என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசிய கடன் மறுசீரமைப்பு தீர்மானத்துக்கு தாம் எதற்காக வாக்களித்தோம் என்பதே தெரியாமல் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் உள்ளார்கள். பாராளுமன்ற பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக ஜனாதிபதியின் கட்டளைகளுக்கு அமைய செயற்படுகிறார்கள்.
தேசிய கடன் மறுசீரமைப்புக்கான தீர்மானங்கள் எடுக்கும் சகல அதிகாரங்களும் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. தேசிய கடன் எந்த வகையில் மறுசீரமைக்கப்படும் என்பது தொடர்பான திட்டம் அமைச்சரவை கொள்கை பத்திரத்தில் தெளிவாக உள்ளடக்கப்பட வேண்டும் என சட்டமா அதிபர் கடந்த மாதம் 27ஆம் திகதி திறைசேரியின் செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக வலியுறுத்தியுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சட்டமா அதிபர் வழங்கிய குறித்த ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித சட்ட உத்தரவாதமும் வழங்கப்படவில்லை.
எதிர்வரும் காலங்களில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் இந்த பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றார்.
தேசிய வளங்களை பாதுகாக்கும் பொதுஜன பெரமுனவின் கொள்கையை ஜனாதிபதி இல்லாதொழிக்கிறார்.நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பு எதிர்வரும் காலங்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் மேலும் தெரிவித்தார்.